தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம் !

Filed under: அரசியல்,தமிழகம் |

l2014080655647-_-684அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை, டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ந்து போயுள்ளதாக கூறுகிறார்கள். டெல்லி பா.ஜ.க. தலைவர்களை ஆணவத்தால் ஒதுக்கிய பா.ஜ.க. தலைமையின் அடிவருடிகளை தற்போது துடைப்பத்தால் பா.ஜ.க.வை அள்ளிய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி திகைக்க வைத்துள்ளதாம். பீகாரில் துதிபாடிகளின் ஆலோசனையை கேட்டு, நீக்கப்பட்ட முதல்வருக்கு ஆதரவு தர சம்மதித்த பா.ஜ.க., பிறகு ஜகா வாங்கி கைவிட்டது. அதேபோல் மேற்கு வங்கத்தில் தேவையற்ற நிலையில் மம்தாவை உசுப்பேற்றி, தற்போது தன் தலையில் தானே கை வைத்து திகைக்கிறது மத்திய பா.ஜ.க.

தமிழகத்தில் அரசியல் கோமாளித்தனம் செய்யும் ஒரே கட்சியாக தமிழக பா.ஜ.க.வை குறிப்பிடுகிறார்கள். தேவையற்ற பில்டப்புகளை காட்டி மக்களுக்கு சர்க்கஸ் வித்தை மோடியை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய துணிந்தனர். பாவம் இரட்டை இலை பெரிதாக விஸ்வரூபம் எடுத்து தாமரையை மறைத்து அழித்துவிட்டது. திருவரங்கம் சட்டசபை தேர்தல் பா.ஜ.க.வின் தமிழக ஆதரவை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால் பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க.வுடன் உறவு கொள்ள திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்து உள்ளது. விரைவில் தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றப்பட்டு, ராஜா தமிழக பா.ஜ.க.வை தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

அகில இந்திய காங்கிரஸ் ராகுல் காந்தியை விரைவில் தலைவராக்க திட்டம் தீட்டியுள்ளதாம். அதற்காக 11 பேர் அடங்கிய குழு ராகுலுக்கு ஆதரவாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள். காங்கிரஸின் சமீபகால பாதாள தோல்விக்கு காரணங்கள் என்ன என்று ஆராயப்பட்டு வருகின்றன. உண்மையில் ராகுல் காந்தியின் எண்ணங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு பயன்பட்டாலும் அதை செயல்படுத்த முடியாமல் அவரது அடிவருடிகள் கோட்டை விட்டுவிட்டு தவிக்கிறார்கள். டெல்லி சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் வளர்ச்சியை ஆணிவேராக சிதைத்து விட்டதாம். மகாராட்டிரம் பவார் கூட்டணியை இழக்கும் நிலையில் உள்ளதாம். கர்நாடகத்தில் சித்தராமையாவிற்கு எதிராக லிங்காயத், ஒக்கலிகர்கள், அந்தணர்கள், தலித்துகள் ஒன்றுகூடி உள்ளனர். இதனால் சுமார் 120 தொகுதிகளை காங்கிரஸ் இழக்கும். மேலும் ஈடிகர்கள், நாயக் இனத்தினர் பா.ஜ.க.விற்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளனர். ஆக மொத்தம் காங்கிரஸ் 160 சட்டசபை தொகுதிகளை இழக்கும் நிலையில் உள்ளது. இதனை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை என்பது சுட்டெரிக்கும் உண்மை.
இலங்கை தமிழர்கள் பிரச்னையில் புத்திசாலித்தனமாக மோடி இலங்கைக்கு தாரை வார்த்து விட்டதாகக் கூறுகிறார்கள். இலங்கை அதிபரின் முடிவுகளுக்கு இந்தியா ஆதரவு தரக்கூடும் என்ற வதந்தி உலவுகிறது. தமிழர்களை உயர்த்துவோம் என்ற போர்வையில், இலங்கை தமிழர்களை இலங்கை படைகொண்டு தீவிர கண் காணிப்புக்கு உள்ளாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்களாம். ராஜபக்சே போல் ஆணவத்துடன் செயல்படாமல், குள்ளநரி தந்திரத்துடன் தமிழர்களை ஒடுக்க திட்டம் தீட்டியுள்ளார்களாம். தமிழ், தமிழர் என்று கூவும் தமிழக வாய்ச்சொல் வீரர்கள், இலங்கையின் நயவஞ்சகம் திட்டம் தெரியாமல், கூலிக்கு கூவிக்கொண்டு திரிகிறார்கள். தமிழக பா.ஜ.க. இலங்கை தமிழர்களை திட்டம் தீட்டி ஒடுக்க இலங்கை அதிபருக்கு ஆதரவு கொடுக்கக்கூடும் என்ற கருத்து உலவுகிறது. தமிழ் குலத்தை அழித்த காங்கிரஸ், தமிழக காங்கிரஸ் மூலமாக இனி முதலைக்கண்ணீர் வடிக்க துவங்கும் என்கிறார்கள். தி.மு.க. அறிக்கைகளை கடும் கோபமாக வெளியிடும். அ.தி.மு.க. மோடியை கண்டித்து, கடிதம் எழுதி கோபத்தை வெளிப்படுத்தும். ஆனால் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரச்னையை ஒரு முடிவுக்குவர திட்டம் உள்ளதாகக் கூறுகிறார்கள்.