இந்திய ஜனாதிபதியாக மீண்டும் ஒரு பெண் – கணித்து சொல்கிறார் சேலத்து ஜோதிடர் !

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

சேலம்,

மிகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்திய திருநாட்டின் 14வது ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பொதுவாக மத்தியில் ஆளும் கட்சியினர் ஆதரவானவர்களே ஜனாதிபதியாக அமர முடியும் என்பதால், தற்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் ஆதரவில் பலரும் ஜனாதிபதி கனவில் மிதந்தபடி உள்ளனர். அதேபோல் நாங்களும் சளைத்தவர்களல்ல என்பதுபோல ஜனாதிபதி தேர்தலில் தங்களின் நெருக்கடி இருக்கும் என்பது போல காங்கிரசும் தனது பங்கிற்கு செயல்பட்டுக்கொண்டுள்ளது. 

ஆளும் பி.ஜே.பி. சார்பில் 3 பேர் கொண்ட ஜனாதிபதி தேர்வுக்குழுவை அறிவித்துள்ளது. அதேபோல் காங்கிரசும் தனது ஆதரவு கட்சிகளுடன் பேசி முடிவெடுத்து 10 பேர் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்குழுவை அமைத்துள்ளது.

ஆயினும் ஆளும் பி.ஜே.பி. முதலில் ஒரு பட்டியலை தயார் செய்துள்ளதாகவும், அந்த பட்டியலில் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபா உறுப்பினர் நரேந்திரஜாதாவ், ஜார்ஜ்கண்ட் கவர்னர் திரௌபதி முர்மூ, மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, பி.ஜே.பி. மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி என முக்கியஸ்தர்கள் பலரின் பெயர் பட்டியலில் இருப்பதால் பரபரப்பிற்கு பஞ்சமில்லை என்கிறது பி.ஜே.பி. வட்டாரம்.

இப்படியான சூழ்நிலையில் காங்கிரஸ் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினாலும் சரி பி.ஜே.பி. சார்பில்தான் ஜனாதிபதி பதவி என்றும், 2007 – 2012 வரை இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பட்டேல் போல் மற்றுமொரு பெண் வேட்பாளரே இந்திய ஜனாதிபதி எனவும், குறிப்பாக ஜார்க்கண்ட் கவர்னராகவுள்ள திரௌபதி மூர்மூவே இந்திய வரலாற்றில் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமை பெருவார் என சேலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனது தனித்திறமையால் கிரக பலன்களை வைத்து கணித்துள்ளார்.

இவர் ஜெ.வின் மறைவு பற்றி ஏற்கனவே தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதேபோல் தமிழகத்தின் அரசியல் பெரியவர்களில் மூத்த, பழுத்த அரசியல்வாதியின் ஜாதகப்படி அவருக்கு மிக இக்கட்டான நேரம் இது எனவும் வரும் செப்டம்பர் முதலாவது வாரத்திலிருந்து மூன்றாவது வாரத்திற்குள் மிக பெரிய கண்டம் இருப்பதாகவும், இந்த துரதிஷ்டமான கண்ட நேரத்தை மதியால் வெல்ல வேண்டுமெனவும் கணித்துள்ளார். இவரின் கணிப்புகள் பலவும் உண்மையாகி வருவதால் இவரின் இந்த ஜனாதிபதி தேர்தல் கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்கிறது நமது டீம்.