மும்பை: மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மீண்டும் சர்ச்சைக்குள்ளானார் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கி பேசுப்பொருளாக மாறியுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, ‘உடலுறவு கொள்வதை தவிர தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே பாலியல் அத்துமீறலாகும்’ என சமீபத்தில் தீர்ப்பளித்தார்.
அதுமட்டுமல்லாமல் மற்றொரு வழக்கில், சிறுமியின் கையை பிடித்திருப்பதும், ஆடையை ஆகியவை, பாலியல் அத்துமீறலாகாது என தீர்ப்பளித்தார்.
மேலும் ஒரு பாலியல் வழக்கில், பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்திருந்தால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும். ஆனால், பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இல்லை என மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதால், இருவரின் விருப்பதிலேயே சம்பவம் நடந்துள்ளதாக கூறி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இப்படியாக அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். புஷ்பாவின் தீர்ப்புகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால், மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலிஜியம் திரும்ப பெற்றது. இந்நிலையில், நீதிபதி புஷ்பாவின் அதிரடி சர்ச்சை தீர்ப்புகள் முடிந்த பாடில்லை. மனைவியிடம் கணவன் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு பிரசாந்த் ஜாரேவை திருமணம் செய்துக்கொண்ட பெண், கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதால் 2004ல் தற்கொலை செய்துக்கொண்டார்.
இது குறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரை விசாரித்த மும்பை யவத்மால் அமர்வு நீதிமன்றம் ஐபிசி பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), ஐபிசி பிரிவு 498ஏ (கணவர் அல்லது கணவரின் உறவினரின் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 306 பிரிவின்படி 3 ஆண்டுகளும், 498 பிரிவின்படி ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாரே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா கனேதிவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஐபிசி பிரிவு 498ன் படி மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என்று கூறி, குற்றவாளி பிரசாந்த் ஜாரேவை விடுதலை செய்திருக்கிறார் புஷ்பா கனேதிவாலா. மேலும், ஜாரேவின் மகள், தனது தாயை அடித்து, துன்புறுத்தி வலுக்கட்டாயமாக விஷமருந்த செய்ததாக தெரிவித்தும், போலீசார் தற்கொலை என வழக்குப் பதிந்தது ஆச்சரியமளிக்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.