அமித் ஷா: ஒரு கி.மீ தூரம்.. ஒரு மணிநேரம்; களைகட்டும் பிரசாரம்! – உற்சாகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்!

Filed under: அரசியல் |

அமித் ஷா: ஒரு கி.மீ தூரம்.. ஒரு மணிநேரம்; களைகட்டும் பிரசாரம்! – உற்சாகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா நாளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு வருகிறார். நாளை காலை 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் உள்ள மறவன்குடியிருப்பு ஆயுதபடை மைதானத்துக்கு வருகிறார் அமித் ஷா. அங்கிருந்து நேராக சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். மேலும் சுசீந்திரத்தில் `வெற்றிக்கொடியேந்தி வெல்வோம்’ என்ற தலைப்பில் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து வீடுகளில் துண்டு பிரசுரம் விநியோகித்து பிரசாரம் செய்கிறார்.

அதன் பின்னர் செட்டிக்குளம் பகுதியில் இருந்து வேப்பமூடு காமராஜர் சிலை வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். ஒரு கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்து செல்ல ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கிலோமீட்டர் தூர சாலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க தொண்டர்கள், ஒரு லட்சம் பேரை நிறுத்தி அமித் ஷாவுக்கு வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளார் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்.


பொன்.ராதாகிருஷ்ணன்

இதற்காக ஒவ்வொரு ஒன்றியங்களிலும் கட்சியினரை திரட்டும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எந்த பகுதியில் எந்த ஒன்றியத்தை சேர்ந்த தொண்டர்கள் நிற்க வேண்டும் என்ற அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க ஏதுவாக, சிறப்பு வடிவமைப்புடன் ஒரு லாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலை பிரசாரம் முடிவடையும் வேப்பமூடு பகுதியில் அமித்ஷா உரையாற்றுகிறார். அமித் ஷா வேப்பமூடு பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்!

அதன்பிறகு வடசேரி பகுதியில் உள்ள உடுப்பி ஓட்டலுக்குச் செல்லும் அமித் ஷா, அங்கு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். அமித் ஷா தங்க உள்ள உடுப்பி ஓட்டல் நேற்று முதலே போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அமித் ஷாவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ள நிர்வாகிகளுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வின் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து அமித் ஷா நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளார்.


அமித்ஷா

நாளை மதியம் 2 மணி வரை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித் ஷா பின்னர் திருவனந்தபுரம் புறப்பட்டுச். செல்கிறார். `கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெறுபவர் மத்திய அமைச்சராக வருவார்’ என ஏற்கனவே பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது. எனவே முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மீண்டும் மத்திய அமைச்சர் ஆவார் என்ற உத்வேகத்தில் குமரி பா.ஜ.க தொண்டர்கள் பணியாற்றுகிறார்கள்.