ஆர்.எஸ் பாரதி மீது வழக்கு தொடர்ந்து ஆஜராவேன்! அண்ணாமலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன் மீது குற்றம் சுமத்திய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளரிடம் அவர், “புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாய மொழி இல்லை, அது ஆப்ஷனலாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அறிவித்த பின்னர்தான் தமிழ் மொழியை பயிற்று மொழி என திமுக அரசு அறிவித்தது. இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக, ஏன் உருது திணிப்பை எதிர்க்கவில்லை? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு நான் தான் காரணம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். அதற்கு நான் அனுப்பிய நோட்டீசுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. எனவே வருகிற செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நானே ஆஜராகி ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன். நாய் கூட பி.ஏ பட்டம் பெறுவதாக கூறி, கடுமையாக உழைத்து படித்தவர்களை ஆர்.எஸ் பாரதி அவமதித்து விட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு அதிமுக மறைமுக உதவி செய்கிறது. தேர்தலில் போட்டியிட்டால் மூன்றாவது, நான்காவது இடத்திற்கு வந்து விடுவோம் என்ற அச்சத்தில்தான் அதிமுக போட்டியிடவில்லை. திமுக சார்ந்த அரசியலை விஜய் முன்னெடுத்தால் சாதகமாக இருக்கும், எங்கள் வளர்ச்சிக்கு உதவும்” என்றும் அண்ணாமலை கூறினார்.