இறங்கி அடிங்க… ‘அவர்’ பாத்துப்பார்.. ஸ்டாலினின் ஒற்றை வார்த்தை.. ‘அதிரும் மதுரை மேற்கு;

Filed under: அரசியல் |

இறங்கி அடிங்க… ‘அவர்’ பாத்துப்பார்.. ஸ்டாலினின் ஒற்றை வார்த்தை.. ‘அதிரும் மதுரை மேற்கு;

சென்னை: மதுரை மேற்கு தொகுதியில் ஏனோதானோவென்று இருந்த தேர்தல் களம் இப்போது சூடு பறக்கத் தொடங்கியுள்ளது.

மதுரை மேற்கு தொகுதியில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. மதுரை என்றாலே பரபரப்பு தானே. இங்கு சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பது செல்லூர். கே.ராஜு. ஆம்.. நம்ம மினிஸ்டர் ராஜுவே தான்.

இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், இங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில், திமுக வேட்பாளராக சின்னம்மாள் என்பவர் அறிவிக்கப்பட்டார்.இதில், அதிமுகவினரை விட பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளூர் திமுக கேங் தான்.

அதிருப்தி

முக்குலத்தோர் அதிகம் நிறைந்துள்ள மதுரை மேற்கு தொகுதியில், அதிமுக வேட்பாளர் செல்லூர்.ராஜூவை எதிர்க்க வலிமையான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று உள்ளூர் திமுக நிர்வாகிகள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சின்னம்மாள் வேட்பாளராக அறிவிக்கப்பட, ‘என்னப்பா இது.. தளபதி இப்படி பண்ணிட்டாரு’ என்ற முணுமுணுப்பு அதிகமானது. மாவட்டப் பொறுப்பாளரான கோ.தளபதி டீம் பெரும் அதிருப்திக்கு ஆளானது.

திமுக யோசனை

மதுரை மேற்கு, மத்திய தொகுதியை உள்ளடக்கிய மாநகர தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருப்பவர் கோ.தளபதி. உள்ளூரில் செல்வாக்கு உள்ள கோ.தளபதிக்கு தான் இம்முறையும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம், மேற்குத் தொகுதியில் ஏற்கனவே செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து இரண்டு முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்ததால், திமுக தலைமை மீண்டும் சீட் கொடுக்க யோசித்தது. இதனால் மேற்கில் ‘நோ’ சொன்ன ஸ்டாலின், ‘வடக்கில்’ ஓகே சொன்னார். கோ.தளபதிக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது.

வேலை செய்வார்களா?

அதுமட்டுமின்றி, மதுரை மேற்கில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஜெயராமன், எஸ்.பாலமுருகன், வழக்கறிஞர் இளமகிழன் ஆகியோரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், முழுக்க முழுக்க அதிருப்திக்கு மத்தியில் களமிறங்கிய சின்னம்மாளுக்கு திமுகவினர் தேர்தலில் வேலை செய்வார்களா என்ற சந்தேகம் எழ, இந்த தகவல் அப்படியே தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டது.

முற்றுப்புள்ளி

இதுகுறித்து மதுரை மேற்கு திமுக நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசுகையில், ‘திமுகவினர் நமக்கு வேலை செய்வார்களோ என்ற பதட்டத்தில் தான் இதுநாள் வரை சின்னம்மாள் இருந்தார். ஆனால், சமீபத்தில் அறிவாலயத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு இந்த அத்தனை குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அதில், மதுரை மேற்கு பொறுப்பாளராக இருக்கும் கோ.தளபதி மற்றும் இதர நிர்வாகிகளின் தொண்டர்கள் உங்களுக்காக வேலை செய்வார்கள் என்றும், ஆகையால் எதைப்பற்றியும் யோசிக்காமல் வெற்றிக்காக இறங்கி பணியாற்றுங்கள் என்று ஆறுதல் வார்த்தைகள் தெரிவிக்கப்பட்டதாம்.

சட்னி கூட செய்யல

அதன் தொடர்ச்சியாகவே, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய தெர்மாகோலுடன் சென்ற சின்னம்மாள் ‘செல்லூர் ராஜூவை துரத்தியடிப்போம்’ , ‘கோமாளி ஊழல்வாதிகளை விரட்டியடிப்போம்’ போன்ற வாசகம் எழுதிய தெர்மோகோல் பதாகையில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, “மதுரையை சிட்னியாக்குவேன் என்ற செல்லூர் ராஜு, இதுவரை ஒரு சட்னி கூட தயார் செய்யவில்லை” என்று ஹைபிட்சில் தனது எலெக்ஷன் வால்யூமை எகிற வைத்துள்ளாராம் சின்னம்மாள்.