பக்தி யாத்திரைக்கான பயணத்தில் பேருந்து கட்டுப்பாடிழந்ததால் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்டில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோவிலுக்கு நேற்று மாலை பக்தர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து பேருந்தில் சர்தாம் புனித யாத்திரை பயணமாகி உள்ளனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்துள்ளது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேரில் 22 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.