எங்கள் கல்வி மீதும், காவிரி மீதும் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்!

சென்னை, மே 2

மத்திய அரசு, எங்கள் கல்வி மீதும், காவிரி மீதும் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிக்கை.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களிடமிருக்கும் கல்வியை கைப்பற்ற வேண்டும் என்பது உலக வரலாற்றில் அறமற்ற முறையில் அத்துமீற நினைக்கும் அதிகார வர்க்கத்தின் முதல் செயல் திட்டம் ஆகும். ஏற்கனவே நாங்கள் நீட் என்கிற எமனுக்கு பத்துக்கும் மேற்பட்ட அறிவும் செறிவும் நிறைந்த எங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை பலி கொடுத்திருக்கிறோம். தமிழ் நாட்டிலுள்ள மொத்த அரசு பள்ளிகளிலும் படித்த மாணவர்களில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க தேர்வாகியிருக்கிறான் என்பது எவ்வளவு பெரிய இரக்கமற்ற வன்முறை? அந்த ரணங்களே இன்னும் ஆறாத நிலையில் இப்போது கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான முன் வரைவினை மத்திய அரசு எடுத்திருப்பது வெந்த புண்ணில் வேலை சொருகுவதற்கு சமம்.

வ.கௌதமன்

கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவதால் பெரிதும் பாதிக்கப்பட போவது யார்? அன்றாடங் காய்ச்சிகளும்,பொருளாதாரப் பின்னணியில் நலிவடைந்தோரும்,  ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களும்தான். ஏனென்றால் நீட்டினைப் போன்றே இதற்கான கேள்வித்தாட்களை தயார் செய்வதும் எமக்கு சம்மந்தமில்லாத வடக்கினை சார்ந்தவர்களே. மருத்துவத்தைத் தொடர்ந்து மற்ற உயர் கல்வியின் அடிமடியிலும் மத்திய அரசு  கை வைத்திருப்பது குமுறலை மட்டுமல்ல தமிழர்கள் மனதில் பெரும் கொந்தளிப்பையே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக மக்களின் நிதியில் கல்வி நிலையங்களைக் கட்டி வைக்க, எவரெவரோ வந்து படித்துவிட்டுப் போக தமிழ்நாடு ஒன்றும் தரித்திர மடமல்ல, சரித்திர மண்.

கொரோனா பாதிப்பால் உலகமே அச்சத்தின் உச்சத்தில் உறைந்து கிடக்கிறது. கொரோனா என்கிற இக்கொடூர நோயிலிருந்து மக்களை காக்கத் திட்டமிடவேண்டிய மத்திய அரசு  தமிழ்நாட்டின் கல்வி உரிமையில்  கை வைத்ததோடு மட்டுமல்லாமல் காவிரி உரிமையிலும் அத்து மீறுவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழர்களுக்கு இருக்கும் நீண்ட நெடிய பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று காவிரி நதிநீர் பிரச்சனை. ஐம்பத்திரெண்டு ஆண்டுகளாகவே இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக விவசாயிகள் உட்பட தங்களின் இன்னுயிரை  ஈந்தவர்களின் தியாகம்  எண்ணிலடங்காது.
நாங்கள் நித்தம் நித்தம் போராடிக் கேட்டது காவிரி  மேலாண்மை வாரியம். நீதித்துறை எங்களுக்கு தந்தது பல்லில்லா பாம்பான காவேரி மேலாண்மை ஆணையம். அற்ப சொற்ப பலன்களைக் கொண்ட அந்த பல்லில்லா பாம்பையும் மத்திய அரசு இப்போது பிடுங்க நினைப்பது எத்தகைய அறம்.

ஆறும் நீறும் ஒரு பூர்வகுடி மக்களுக்கு சொந்தமில்லையென்றால் அவன் அழிவதைத் தவிற வேறு வழியில்லை என்பதே உலக சரித்திரம். கொரோனா தாண்டவத்தில் உருண்டு கிடக்கும் இப்பூமிப்பந்தில் சுருண்டு கிடக்கிறது மனித இனம். அதில் உழுது புரண்டு உணவளிப்பவன் பெற்ற தாயிற்கு நிகரான விவசாயி. காவிரி உரிமை பறிப்பின் மூலமாக அவன் வயிற்றிலடிப்பது  தாயின் வயிற்றிலடிப்பதற்குச் சமம்.

நாட்டு மாடுகளை (இயற்கை விவசாயம்)காக்கத்தான் ஜல்லிக்கட்டுக்காக போராடி சிறை சென்றோம், விவசாயிகளை காக்கத்தான் ஐ.பி.எல் – ஐ தடுத்து நிறுத்தி  சிறை சென்றோம்.  காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்லித்தான் கத்திப்பாரா பாலத்தில் போராடி சிறையிலடைக்கப்பட்டோம். நீட்டினை எதிர்த்து போராடித்தான் சிறை வதைப்பட்டோம். ஆனாலும் நாங்கள் ஓயவில்லை.

கொடூர கொரோனா கூட உயிர்கள் பறிப்பதை ஓரிடத்தில் நிறுத்தி விடும் போலிருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜ.க அரசு தமிழர்களின் உரிமைகள் பறிப்பதை ஓர் நாளும் நிறுத்தாது என்பதற்கு எங்களின் கல்வி, காவிரி உரிமைகள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போரே ஐயமறத் தெளிவுபடுத்துகிறது. இதனை தமிழக அரசு ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திட வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக -வும் வேடிக்கை பார்த்து விடக்கூடாது.

காவேரி மேலாண்மை ஆணையத்தை தன் வசப்படுத்த நினைப்பதையும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பதையும் மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். இல்லையேல் நேரம் காலம் எது வென்று பார்க்காமல் சமரசமில்லா ஒரு போராட்டத்தை நாங்கள்  கையிலெடுக்க வேண்டிவரும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன், என அறிக்கை மூலம் கூறியுள்ளார்.