எண்ணெய் கப்பல் மீதான கடற்கொள்ளையர்களின் தாக்குதலை முறியடித்த ஈரான்!

Filed under: உலகம் |

நடுக்கடலில் ஈரானின் எண்ணெய் கப்பல் மீதான கடற்கொள்ளையர்களின் தாக்குதலை ஈரான் கடற்படை முறியடித்துள்ளது. கப்பல் போக்குவரத்திற்கு ஒரு முக்கிய நீர்வழி பாதையாக திகழும் ஏடன் வளைகுடாவிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

ஏடன் வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்து ஈரானின் எண்ணெய் கப்பலை, ஐந்து அதிவேக படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து, ஈரான் கடற்படையிடமிருந்து சரமாரியான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்ட கடற்கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

ஏடன் வளைகுடாவில் ஈரான் கப்பல் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 12 சோமாலிய கடற்கொள்ளை படகுகள் ஈரானிய எண்ணெய் கப்பலை தாக்கியது நினைவுக் கூரத்தக்கது.

2008ல் சோமாலிய கடற்ககொள்ளையர்கள் ஏமன் கடலில் வைத்து ஈரானின் சரக்கு கப்பலை கடத்திச் சென்ற நாள் முதல், ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான ரோந்து நடவடிக்கைகளை ஈரான் கடற்படை மேற்கொண்டு வருகின்றனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து ஈரானியக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக ஈரானின் கடற்படை சமீபத்திய ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவிற்கு கப்பல்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.