சீனு ராமசாமி இயக்கிய “மாமனிதன்” தியேட்டரில் சொதப்பினாலும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி இருவரின் கூட்டணியில் “தென் மேற்குப்பருவக்காற்று,” “இடம் பொருள் ஏவல்”, “தர்மதுரை” ஆகிய படங்களுக்கு அடுத்து “மாமனிதன்” படம் உருவானது. 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டே முடிவடைந்தது. இப்படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக கூறப்பட்டது. இப்படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் வாங்கினார். சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் மாற்றப்பட்டது. கடைசியாக ஜூன் 24ம் தேதி ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீசாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நல்ல விமர்சனங்கள் இருந்தும் திரைப்படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர் கூட்டமில்லை. படம் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களில் ஓடிடியில் ரிலீசாகிறது. ஜூலை 15 முதல் ஆஹா தமிழ் ஓடிடியில் ‘மாமனிதன்’ ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தியேட்டருக்கு நேர்மாறாக ஓடிடியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இப்போது “மாமனிதன்” இயக்குனர் சீனு ராமசாமியை ஆஹா ஓடிடி அணுகி நேரடி ஓடிடி திரைப்படம் ஒன்றை இயக்கித்தர கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.