கணவன் மற்றும் மாமியை கொன்று பிரிட்ஜில் வைத்த மனைவி!

Filed under: இந்தியா |

பெண் ஒருவர் கள்ளக்காதலனுக்காக தனது கணவனையும், மாமியாரையும் கொன்று பிரிட்ஜில் வைத்த சம்பவம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்துள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரிலுள்ள நரேங்கி பகுதியில் வசித்து வந்த அமர்ஜோதி டே. இவரது தாயார் சங்கரி டே. சில ஆண்டுகளுக்கு முன்பு அமர்ஜோதி டேவுக்கு வந்தனா கலீடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவரது திருமண வாழ்க்கையும் நன்றாக போய்க் கொண்டிருந்தபோது வந்தனாவுக்கு தன்ஜீத் தேகா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நெருங்கி பழகிய இருவரும் அடிக்கடி உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இது அமர்ஜோதிக்கு தெரிய வரவே கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை விவாகரத்து செய்யும் முடிவில் அமர்ஜோதி டே இருந்துள்ளார். அமர்ஜோதி டேவுக்கு சொந்தமான 4 கட்டிடங்களை அவரது மாமா ஒருவர் நிர்வகித்து வந்துள்ளார். அமர்ஜோதியின் சொத்துகளை இழக்க விரும்பாத வந்தனா கலீடா ஒரு சதி திட்டத்தை தீட்டியுள்ளார். அதன்படி கள்ளக்காதலன் தன்ஜீத் தேகா மற்றும் மற்றொரு நபருடன் சேர்ந்து தனது கணவர் மற்றும் மாமியாரை வந்தனா கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களது உடல்களை பல துண்டுகளாக வெட்டி பாலீத்தீன் கவரில் போட்டு மேகாலயா அருகே தவுகி பகுதியில் இருந்த 60 அடி பள்ளத்தில் வீசி அப்புறப்படுத்தியுள்ளனர்.
பின்னர் காவல் நிலையம் சென்ற வந்தனா தனது கணவரையும், மாமியாரையும் கடந்த 7 மாதங்களாக காணவில்லை என புகாரளித்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர் தீவிரமாக விசாரித்ததில் உண்மை தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வந்தனா, அவரது கள்ளக்காதலன் தன்ஜீத் தேகா மற்றும் அரூப் தாஸ் ஆகிய மூவரை கைது செய்து இறந்தவர்களின் உடல் பாகங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.