கல்லூரி விழாவில் முதலமைச்சர் பேச்சு!

Filed under: சென்னை |

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐ.டி. கல்லூரிக்கு “ஏ பிளஸ் பிளஸ்” சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கல்வி உரிமைதான் பெண்கள் உரிமை” என்று கூறியுள்ளார்.

மதச்சார்பின்மையின் மறு உருவம்தான் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி. எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரிக்கு ஏபிளஸ்பிளஸ் தரச்சான்றிதழை கல்லூரி முதல்வரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மாணவிகள் மத்தியில் உரையாற்றிய போது, “பெண்களுக்கான கல்லூரியாக எஸ்.ஐ.இ.டி. கல்லூரி திகழ்கிறது. தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் நான் இந்த கல்லூரிக்கு வாக்களிக்க வருவேன். என்னுடைய வெற்றிக்கான வாக்கினை செலுத்திய இந்த கல்லூரியில்தான் இன்று உங்களை சந்திக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மதசார்பற்ற, சமூக நீதியை பின்பற்றும் கல்லூரியாக எஸ்.ஐ.இ.டி. கல்லூரி செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 7,500 மாணவிகள் பயிலும் கல்லூரியில் 50 சதவீதம் இஸ்லாமியர், 50 சதவீதம் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவிகள் பயில்கின்றனர். இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களின் கல்விக்காக உழைக்கும் கல்லூரி இது. திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் சுய உதவிக்குழு திட்டம் கொண்டுவரப்பட்டது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் இந்த கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். விழாவில் அமைச்சர் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.