கல்லை வீசிய அமைச்சர்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சமூக வலைதளங்களில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசி கல் எறிந்த வீடியோ வைரலாகியுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழ்நாட்டில் திமுக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக ஆவடி எஸ்.எம்.நாசர் பதவி வகித்து வருகிறார். சமீபகாலமாக திமுக அமைச்சர்கள் சிலர் பேசியது சர்ச்சைக்குள்ளானது. தற்போது அமைச்சர் நாசரின் செயலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நாசர் அங்கு சேர் எடுத்துவர தாமதம் செய்தவர்களை ஒருமையில் திட்டியதுடன், கல்லை எடுத்து அடிப்பதற்காக வீசும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமைச்சரின் இந்த செயல் பொதுவெளியில் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விரைவில் ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமைச்சரின் இச்செயல் கட்சிக்குள்ளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.