கள்ளக்காதலனுக்கு துணைபோன சப்-இன்ஸ்பெக்டர் !

Filed under: தமிழகம் |

விருதுநகர், ஜூன் 20

இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா.? சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக சைய்யது இப்ராஹீம் தனது வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொது ஜனங்களிடம் வாதி, பிரதிவாதிகளிடம் தனித் தனியாக விசாரணை என்ற பெயரில் உன்னை ரிமாண்ட் செய்ய போகிறேன். உள்ளே தள்ளி விடுவேன் என்று புகாரில் சம்பந்தப்பட்ட வாதி, பிரதிவாதிகளிடம் நாசுக்காக மிரட்டுவார். இதனால் பயந்து போகும் வாதி பிரதிவாதிகள் ஆகிய இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அவர் சொல்லும் நிபந்தனைகளுடன் எழுதிக் கொடுத்துவிட்டு அவர் கேட்கும் கப்பத்தை மொய் எழுதிவிட்டு ஆளை விட்டால் போதுமடா சாமி என்று தலை தெறிக்க ஓடி கொண்டிருக்கிறார்களாம்.

பெருமாள் ஐ.பி.எஸ்

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட  உப்பத்தூர் அருகே உள்ள ஊமத்தன் பட்டியில் ஒரு குடும்ப விவகாரத்தை கையிலெடுத்த எஸ்.ஐ. செய்யது இப்ராஹீம் காவல் நிலையத்தில் நீ தான் குற்றவாளி என்று குடும்ப விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக்கு நியாயத்தீர்ப்பு வழங்கிய சப் இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் நான் சொல்வதைக் கேட்க விட்டால் ரிமாண்ட் செய்து விடுவேன் என்று மிரட்ட உடனே அந்த நபர் மக்கள் பிரதிநிதி ஒருவரை அழைத்துச் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது எஸ்.ஐ. செய்யது இப்ராஹிம் நான் நினைத்தால் ரிமாண்ட் செய்து விடுவேன் என்று அலைபேசியில் மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் பேசிய பேச்சு உரையாடல் இன்று சாத்தூர் தாலுகாவில் வைரலாகி சென்று கொண்டிருக்கிறது. அந்த உரையாடல் பேச்சு நமது கவனத்திற்கு வரவே, நாம் விசாரணையில் இறங்கி விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் நமக்கு கிடைத்தது.

அதன் விவரம் இதோ… சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஊமத்தன் பட்டியில் வசித்து வருபவர் ஐயப்பன். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஜே.சி.பி. டிரைவரான ஐயப்பன் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வருவது வழக்கம். ஐயப்பனின் நண்பர் நாராயணன் என்பவர் ஐயப்பன் வீட்டுப் பக்கத்தில் வசிப்பதால் ஐயப்பன் மனைவிக்கும் நாராயணனும் அடிக்கடி அலைபேசியில் பேசிக் கொள்வார்களாம். ஒரு நாள் தனது மனைவியின் அலைபேசியை பார்த்த ஐயப்பனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாராயணன் செல்நம்பர் உனக்கு எப்படி தெரியும் என்று தனது மனைவியுடன் வாய் தகராறில் ஈடுபட்ட ஐயப்பன் உடனே கால் ரெக்கார்டிங் சென்று பார்த்தபோது தனது மனைவியும் நாராயணனும் உல்லாசமாக பேசிய பேச்சு பதிவாகி இருந்ததை கண்டு ஐயப்பன் கொதித்தெழுந்தார். உடனே நாராயணனை தேடிச் சென்று நியாயம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் பிரச்சனை ஊமத்தம்பட்டி கிராமத்தில் பஞ்சாயத்து பேசப்பட்டதாம். அப்படியிருந்தும் ஐயப்பனும் நாராயணனும் ஒருவரை ஒருவர் பார்த்து உருமி கொண்டிருந்தனர்.

தனது மனைவி வேலியை தாண்டிய வெள்ளாடு போல ஆகி விட்டாளே என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ஐயப்பன் உருமி கொண்டிருந்தார். ஒரு நாள் நாராயணனை பார்த்த ஐயப்பன் கோபத்தின் உச்சிக்கே சென்றார். அத்துடன் அவருடன் தகராறில் இறங்கினர் உடனே சுதாரித்துக் கொண்ட நாராயணன் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று எஸ். ஐ. செய்யது இப்ராஹிமை சந்தித்து தனது கள்ளக்காதல் விவரத்தைக் கூறினார். இதில் தன்னை காப்பாற்றும் படி கேட்டார் அத்துடன் கணிசமான தொகையை கொடுத்தாராம். அப்போது எஸ்.ஐ. செய்யது இப்ராஹிம் கட்டப்பஞ்சாயத்து கடவுளாக மாறி நாராயணனுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்து அனுப்பி விட்டாராம்.

நாராயணனிடம் கரன்சி வாங்கிய விசுவாசத்தில் உடனே அலைபேசி மூலம் ஐயப்பனை தொடர்புகொண்ட எஸ்.ஐ. செய்யது இப்ராஹிம் உன் மீது வழக்கு பதிவாகி உள்ளது. உடனே ஸ்டேஷனுக்கு வரவேண்டுமென்று மிரட்டினாராம். அப்போது, ஐயப்பன் ஐயா நான் வெளியூரில் இருக்கிறேன் நாளை வந்து விடுகிறேன் என்று கெஞ்சி கூத்தாடினார். ஆனால், எஸ். ஐ. செய்யது இப்ராகிம் மிரட்டல் அதிகரிக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய 19வது வார்டு கவுன்சிலர் கணவரான பால முருகனிடம் ஐயப்பன் தஞ்சமடைந்தார். மக்கள் பிரதிநிதியின் கணவரான பாலமுருகன் உடனே சாத்தூர் தாலுகா காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீமை அலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறி குடும்ப விவகாரத்தை சுமூகமாக முடித்துத் தருமாறு சொன்னார். அப்போது எஸ். ஐ. செய்யது இப்ராஹிம் என்ன சொன்னார் தெரியுமா.? இந்த பாருங்க பாலமுருகன் எவன் பொண்டாட்டியும் யார் கூட வேண்டுமானாலும் போகலாமுன்னு சட்டம் சொல்லுது அதனால இவன் பேசாமல் இருக்க வேண்டியது தானே ஏன் தகராறு செய்கிறான் என்று கட்டப்பஞ்சாயத்து கடவுளாக கூற உடனே பாலமுருகன் சார் ஐயப்பன் குடும்பம் பிரிந்து செல்வதை மக்கள் பிரதிநிதியான நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்று நியாயம் பேசினார்.

அப்போது, எஸ். ஐ. செய்யது இப்ராஹிம் தனது வானளாவி அதிகாரத்தோடு பேசியதோடு மட்டுமல்லாமல் உடனே ஸ்டேஷனுக்கு வராவிட்டால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 301 இல் வழக்குப்பதிவு செய்து ரிமாண்ட் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அப்போது எந்த தவறும் செய்யாத ஐயப்பன் மீது ஏன் வழக்கு பதிவு செய்கிறீர்கள் நாளைக்கு  ஸ்டேஷனுக்கு அழைத்து வருகிறேன் என்று கூற வேண்டாவெறுப்பாக சரி சரி என்று கூறிய எஸ்.ஐ. செய்யது இப்ராகிம் தனது அலைபேசியில் தொடர்பை துண்டித்துக் கொள்கிறார். பின்பு, ஸ்டேஷனுக்கு சென்ற வாதி ஐயப்பன் பிரதிவாதி நாராயணன் ஆகிய இருவரிடமும் தனியாக பேசி மிரட்டி வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு அவர்களிடம் இனிமேல் பிரச்சனை செய்யமாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினாராம். சாத்தூர் தாலுகா காவல் துறை சப்இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் என்று நம்மிடத்தில் மேற்படி தகவலை சொல்லி ஒப்பாரி வைக்கிறார்கள் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் நேர்மையாக பணி புரியும் சில காவலர்கள். விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் ஐ.பி.எஸ். சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் கட்டப்பஞ்சாயத்து கடவுளாக மாறி புகார் கொடுக்க வரும் அப்பாவி பொது ஜனங்களிடம் நியாயத்தீர்ப்பு கூறும் பல தில்லாலங்கடி வேலைகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இல்லாவிட்டால் சட்டம் ஒழுங்கு கேலிக்கூத்தாக்கி விடும் என்பதில் சந்தேகமில்லை என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் சாத்தூரில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர்.!