கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அண்ணாமலையின் திடுக் தகவல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அண்ணாமலை, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முன்னாள் எஸ்பிக்கு விடுத்த மிரட்டல் தான் காரணம் என்றும், அவர் விருப்ப ஓய்வில் சென்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மோகன்ராஜ். அவர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணி செய்து வந்த 25 காவலர்களை இடமாற்றம் செய்தார். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த மோகன்ராஜ், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. ஆனால், அதற்கு காவல்துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. திரு.மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இன்றைய தினமலர் நாளிதழில், திரு. மோகன்ராஜ் அவர்கள், ஓய்வு பெற எட்டு மாதங்கள் இருக்கும்போதே விருப்ப ஓய்வில் சென்றதற்குக் காரணம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தும், அவரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்தப் பகுதி திமுக முக்கியப் புள்ளிகள் மிரட்டியுள்ளதாகவும், காவல்துறை தலைமையும் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்பதால், வேறு வழியின்றி விருப்ப ஓய்வில் சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை எண்ணி உண்மையான வருத்தம் இருக்குமேயானால், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்ராஜ் அவர்களை மிரட்டிய திமுக முக்கியப் புள்ளிகள் யார் என்பதையும், இதனை அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் யார் என்பதையும் விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், எல்லாம் தெரிந்திருந்தும், தன் கட்சியினரைக் காப்பாற்ற பொதுமக்களைப் பலி கொடுத்த முதலமைச்சர் என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு முதற்படியாக, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, சுமார் ஐம்பது உயிர்கள் பறிபோனதற்குப் பொறுப்பேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான முதலமைச்சரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா?” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.