கிரிக்கெட் வீரரின் தந்தை “இந்தியன் 2” திரைப்படத்திலா?

Filed under: சினிமா |

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று நபர்கள் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் சில தினங்களாக கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார். “இந்தியன் 2” மீண்டும் தொடங்கப்பட்டதற்கு “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றி ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்கி கொண்டிருப்பதால் இரண்டு படங்களுக்கும் தேதிகளைப் பிரித்துக் கொடுத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். ஒரு மாதத்தில் 10 நாட்கள் என இப்படத்துக்காக கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் தேதியை ஒதுக்கியுள்ளனர். தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் “இந்தியன் 2” படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இத்திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்திலிருந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.