கோவில்களை திறக்காவிட்டால் தோப்புகரணம் போடும் ஆர்ப்பாட்டம் !

Filed under: தமிழகம் |

கோவை,மே 22

தமிழகத்தில் உள்ள கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால், வருகிற மே 26 ஆம் தேதி அன்று அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் தமிழக அரசு கோவில்களை திறக்க வேண்டும். இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும்.

கோவில்கள் மனிதனுக்கு நிம்மதியும் நம்பிக்கையும் கொடுப்பதாகவும் மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையை நடத்துகிறார்கள். மனிதனின் எல்லாக் கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவது கடவுள் நம்பிக்கைதான். ஆகவேதான் கோவில்கள் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். கொரோனா வைரஸ் தொற்று பயத்திலிருந்து மக்களுக்கு நிச்சயம் வழிபாடு, நல்ல நிம்மதியை கொடுக்கும் இந்துக்களுடைய வழிபாடு கூட்டு வழிபாடு கிடையாது, எனவே கோவில்களில் இந்துக்களை கட்டுப்படுத்துவது எளிதானது.

தமிழகத்தில் பெரும் கூட்டம் கூடும் கோவில்கள் அதாவது (திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை, மதுரை மீனாட்சியம்மன் கோவில்) ஆகும். அதே நேரத்தில் மிதமான கூட்டம் கூடும் கோவில்கள், தனியார் நிர்வகிக்கும் கோவில்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிராம கோவில்கள், நகரங்களில் உள்ள சிறுசிறு கோவில்கள், கிராமத்தில் உள்ள சிறிய தனியார் கோவில்கள், குலதெய்வ கோவில்கள் என கோவில்கள் பல வகையில் உள்ளன.பெரிய கோவில்கள் தவிர மற்ற கோவில்கள் கூட்டம் வருவது மிகவும் குறைவு. கிராமங்களில் உள்ள கோவில்களில் நாள் முழுவதும் 10 பேர் கூட வராத கோவில்கள் உள்ளன. சில தனியார் கோயில்கள் நிறைய தன்னார்வலர்கள் கொண்டவர்களுடன் கட்டுப்பாடாக நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில் கிராமப்புற கோவில்களையும் கூட்டம் வராத நகர்புற கோவில்களையும் உடனே அரசு திறக்கலாம். மிகப்பெரும் கோவில்களுக்கு சமூக கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி கோவில்கள் திறக்கலாம். உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம். எனவே கோவில்கள் விஷயத்தில் அரசு ஒரு நல்ல பொருத்தமான முடிவை உடனே எடுக்கும் என்று பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே தமிழக அரசு கோவில்களின் நிலைமையையும் அங்கு வரும் கூட்டத்தின் தன்மையையும் பொருத்து ஒரு நல்ல முடிவு எடுத்து கோவில்களை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கூறுகிறது. மேலும், மக்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட கோவில்கள் அவசியம். தமிழகத்தில் உள்ள இந்து கோவில்கள் அரசு உடனடியாக திறக்காவிட்டால் வழிபாடு உரிமைகளை மீட்க வருகின்ற மே 26 ஆம் தேதி அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.