கேரள அரசு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகனதால் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, நேரத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 90,000 பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க கேரள அரசு முடிவு செய்தது. மேலும் தரிசன நேரமும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) தலைவர் கே அனந்தகோபன் செய்தியாளர்களிடம் இதை உறுதி செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் 90,000 பக்தர்களின் நுழைவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சுமூகமான தரிசனத்திற்கான வசதிகளை உறுதிப்படுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
முதல் பாதியில் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரண்டாவது பாதியில் மாலை 3 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் தரிசன நேரத்தை மாற்றியமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக டிடிபி தலைவர் கூறினார். சமீபத்திய முடிவுக்கு முன், நேரம் காலை 3 முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 முதல் இரவு 11 மணி வரையிலும் இருந்தது. நவம்பர் 17-ம் தேதி தொடங்கிய 41 நாள் மண்டல பூஜை விழா டிசம்பர் 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பின் டிசம்பர் 30-ம் தேதி மகரவிளக்கு யாத்திரைக்காக மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு 2023-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி முடிவடைந்து சன்னதி மூடப்படும். ஜனவரி 20, 2023 அன்று புனித யாத்திரை காலம் முடிவடைகிறது.