சிறுமியை கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – முதல்வர் உறுதி !

Filed under: தமிழகம் |

சென்னை,மே 11

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் 10.5.2020 அன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (11.5.2020) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குற்றவாளிகள் மீது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கொடூர செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும். உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.