தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது.. மினி லாக்டவுன் வரப் போகிறது- சுகாதாரத் துறை செயலாளர் அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது.. மினி லாக்டவுன் வரப் போகிறது- சுகாதாரத் துறை செயலாளர் அறிவிப்பு!

சென்னை: தமிழகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தும் திட்டம் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேநேரம் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க கொரோனா நோய் பரவல் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தற்போது இரண்டாவது அலை வீசுவதாக சுகாதாரத் துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேபோன்றுதான் தமிழகத்திலும் நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சுகாதாரத்துறை செயலாளர்

இந்த நிலையில்தான் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் என்பது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே கொரோனா தொடர்பாக, நல்ல தயார் நிலையில் இருக்கிறோம். கடந்த ஆண்டை விடவும் இப்போது முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம்.

படுக்கை வசதிகள்

ஏற்கனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 56 ஆயிரம் படுக்கை வசதிகள் இருக்கின்றன. கல்லூரிகள் உள்ளிட்ட பிற பகுதிகளில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் 79 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன.

மாவட்ட நிர்வாகங்கள்

கொரோனா கேஸ் இல்லாததால் அந்த மையங்கள் மூடப்பட்டு இருந்தது. அந்த மையங்கள் அனைத்தையும் அனைத்து மாவட்டங்களிலும் மறுபடி திறக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கும் நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மினி லாக்டவுன்

தேர்தலுக்கு பிறகு லாக்டவுன் வருமா என்ற யூகத்தின் அடிப்படையில் நாம் பேச வேண்டியது கிடையாது. கண்டைன்மெண்ட் பகுதிகளில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதாவது ஒரே பகுதியில், 3 பேருக்கு மேல் கொரோனா நோய் தொற்று இருந்தால் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும். அந்த வீடு அல்லது தெரு அல்லது அதிகபட்சம் இரண்டு மூன்று தெருக்கள் சீல் செய்யப்படும். அங்கு அநாவசிய நடமாட்டம் தடை செய்யப்படும். இதற்கு பெயர் மினி லாக்டவுன்.

முழு லாக்டவுன் இல்லை

இதுபோன்ற மினி லாக்டவுன் நடைமுறைகள் தான் இனி கையில் எடுக்கப்படும். இப்படித்தான் நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுக்க லாக்டவுன் வராது. அதற்காக பொதுமக்கள் அலட்சியமாக இருந்து நோய் பரவலுக்கு உட்பட வேண்டாம். தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான வகையில் முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள். இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.