தமிழகத்தில் 26ம் தேதி 3வது தடுப்பூசி முகாம்

Filed under: தமிழகம் |

சென்னை, செப் 24:

“தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, வரும் 26ம் தேதி, தமிழகம் முழுதும், மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது” என மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தமிழகம் முழுதும் மாபெரும் தடுப்பூசி முகாம், 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக, 28 லட்சத்து, 91 ஆயிரத்து, 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம், கடந்த செப்டம்பர் 19ம் தேதி, 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக, 16 லட்சத்து, 43 ஆயிரத்து, 879 பேருக்கு, கொரோனா தடுப்ப்சிகள் செலுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம், தமிழகம் முழுவதும் வரும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம், 15 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடைபெற இருக்கும் மூன்றாவது தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கொரோனா ஒழிக்கும் வகையில் தங்கள் பங்கை செலுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.