தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Filed under: அரசியல் |

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுச்ரேி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மார்ச் 19-ம் தேதி மதியம் 3 மணி உடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

இதையடுத்து மார்ச் 22-ம் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில் தற்போது இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி சட்டமன்ற தேர்தலில் 4024 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 7255 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் 4461 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டு, 2787 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 444 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொண்டனர் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 77 பேர் போட்டியிடுகின்றனர். பவானிசாகர் மற்றும் வால்பாறையில் குறைந்தபட்சமாக 6 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை கொளத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 36 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். குறைந்தபட்சமாக தியாகராயநகர் தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.