திருவண்ணாமலையில் மாந்திரீக பூஜை!

Filed under: தமிழகம் |

திருவண்ணாமலையில் வீட்டிற்குள் மாந்திரீக பூஜை செய்வதை அறிந்து போலீசார் பொக்லைன் வைத்து இடித்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில காலமாக நரபலி, மாந்த்ரீக பூஜை தொடர்பான செய்திகள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையிலும் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தசராபேட்டை கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளியான தவமணிக்கு, காமாட்சி என்ற மனைவியும், பூபாலன், பாலாகி என்ற இரண்டு மகன்களும், கோமதி என்ற மகளும் உள்ளனர். கோமதிக்கு அரியப்பாடியை சேர்ந்த பிரகாஷ் என்பவதை திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த 5 நாட்களாக தவமணி வீட்டில் இந்த 6 பேரும் வீட்டை பூட்டிக்கொண்டு தொடர்ந்து ஏதோ பூஜைகள் செய்து வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறக்க சொல்லியும் அவர்கள் திறக்கவில்லை. அவர்கள் ஏதோ மாந்த்ரீக பூஜை செய்வதாக அஞ்சிய அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் அவர்களை வெளியே வரசொல்லி கூப்பிட்டும், முக்கியமான பூஜை செய்து கொண்டிருப்பதாகவும், வெளியே வர முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். பல மணி நேரங்கள் பேசியும் பயன் இல்லாததால் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து அவர்களை வெளியே அழைத்து வந்தனர். விசாரணையில் கோமதிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அதை விரட்டுவதற்காக அவர்கள் பூஜை செய்து வந்ததாகவும் கூறியுள்ளனர். மீட்கப்பட்ட 6 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வீட்டில் கிடைத்த சூன்ய பொம்மை உள்ளிட்ட மாந்திரீக பொருட்களை தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.