சமூக ஆர்வலர்கள் வேங்கை வயல் விவகாரம் நடந்து 415 நாட்களாகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத நிலையில் தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளும் இவ்விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து 5 பிரிவுகளின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. ஆனால், இன்று வரை குற்றவாளிகள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வழக்கு சிபிசிஐடி கையில் சென்று சில மாதங்கள் ஆகிவிட்டது. சிபிசிஐடியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக தெரிகிறது. மேலும் போலீசார் மந்தமான விசாரணையை நடத்தி வருவதாகவும் குற்றவாளியை பிடிக்கும் அக்கறையே போலீசார் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களாக அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வந்த நிலையில் தற்போது தேர்தல் காலம் என்பதால் இப்பிரச்சனையை மறந்து விட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர். மொத்தத்தில் இவ்வழக்கு முடியவே முடியாத வழக்கு பட்டியலில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.