நில மோசடி வழக்கு: நேரில் ஆஜராக வடிவேலுவுக்கு உத்தரவு

Filed under: சினிமா,தமிழகம் |

சென்னை, செப் 30:

நில மோசடி வழக்கு விசாரணைக்கு, டிசம்பர் 7ம் தேதி நேரில் ஆஜராகக்கோரி, நடிகர் வடிவேலுவுக்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நில மோசடி தொடர்பாக, நடிகர் சிங்கமுத்து உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சமீபத்தில், இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், நடிகர் வடிவேலு வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காக வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாக, நடிகர் சிங்கமுத்து தரப்பு, நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்திருந்தது.

எதிர்தரப்பு வழக்கறிஞர், குறுக்கு விசாரணை செய்ய வேண்டி இருப்பதால், செப்டம்பர் 29ம் தேதி நேரில் ஆஜராக, வடிவேலுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு, நீதிபதி நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வடிவேலு படப்பிடிப்பில் இருந்ததால், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை. இதை, வடிவேலு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கமுத்து வழக்கறிஞர் அறிவழகன், வழக்கை வடிவேலு இழுத்தடித்து வருவதாக சாடினார். பின், வரும் டிசம்பர் 7ம் தேதி தவறாமல் நேரில் ஆஜராகும்படி, வடிவேலுவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.