பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!

Filed under: அரசியல் |

பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!

கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கிய நிலையில், ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள் தொடங்கின. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளும் நடைபெறத் துவங்கின. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சாவூர், கும்பகோணத்திலுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பள்ளிகளில் ஏற்படும் கொரோனா தொற்றால் அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பரவி அந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் அந்த மாவட்டத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கக்கூடாது என்பதாலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி வரும் வரும் 22ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான விடுதிகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு இணையவழி / டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மேலும், தமிழ்நாடு மாநில வாரியம் தவிர மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும். இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமைச் செயலாளரின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *