ராகுல் காந்தியை குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து!

Filed under: அரசியல் |

இந்தியா முழுதும் ஒற்றுமை நடைப்பயணமாக ராகுல் காந்தி செல்ல உள்ள நிலையில் அவரை குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதி தொடங்கி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணம் செய்ய உள்ளார். இது தொடர்பாக இன்று திருச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “இனம், மொழி, ஜாதி என்று பிரித்துப் பார்க்காமல் மக்களின் நல்லிணக்கத்தை வலியுறுத்தி மட்டுமே ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பாஜக சொன்னது. அந்த வாக்குறுதி என்னாச்சு? மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அரிசி 2 ரூபாய்க்கும், கோதுமை 1 ரூபாய்க்கும் கொடுத்தோம். ஆனால் பாஜக ஆட்சியில் அதே அரிசி, கோதுமைக்கு 5% ஜிஎஸ்டி வரி வசூல் விதிக்கிறது. இப்போது ரயில்வே கட்டணத்திலும் கூட ஜிஎஸ்டி வந்துள்ளது. 2047ல் இந்திய வல்லரசாகிவிடும் என்கிறார் பிரதமர் மோடி. இப்போது கஷ்டப்படும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே மத்திய அரசின் கடமை. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் தலைவராக வருவாரா, மாட்டாரா என்ற விவாதமே தேவையில்லை” என்றார்.