வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே களம் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்: சின்னம் வரைந்து பிரச்சாரத்தை தொடங்கினர்!

Filed under: அரசியல் |

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே களம் இறங்கிய திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்: சின்னம் வரைந்து பிரச்சாரத்தை தொடங்கினர்!

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே சுவர்களில் சின்னங்கள் வரைந்தும், கிராமம் கிராமமாக வேன் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளனர் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த முள்ள ஏழு தொகுதிகளில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு தொகுதியை கேட்டுப்பெற முயற்சித்து வரும்நிலையில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட முனைப்புக் காட்டி வருகிறது. சென்னையில் திமுக கட்சித்தலைமையில் நடந்த நேர்காணலில் பங்கேற்று திரும்பியவர்கள் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுவர்களின் சின்னங்களை வரைந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

ஆத்தூர் தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சரும் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி. இவர் இந்தமுறையும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதையடுத்து தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம், புதுச்சத்திரம் பகுதிகளில் உதயசூரியன் சின்னம் வரையும் பணி தொடங்கியுள்ளது. பிற கட்சிகள் தொகுதி பங்கீடு முடித்து வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னரே திமுகவினர் கிராமப்புறங்கள் முழுவதும் தங்கள் சின்னத்தை வரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்றவர் திமுக கொறடா அர.சக்கரபாணி. இவருக்கு இந்தமுறையும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவது உறுதி என்பதால், சென்னையில் நடந்த நேர்காணலில் பங்கேற்று திரும்பியவர், ஒட்டன்சத்திரம் ஜி.ஆர்.பேட்டையில் திமுக தேர்தல் அலுவலக திறப்பிற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தொகுதி எல்லையான லெக்கையன்கோட்டை ஊராட்சி அரங்கநாதபுரம் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் கிராமம், கிராமமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வரு கிறார். இவருடன் திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமி, நகர செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.