500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு – சு.வெங்கடேசன் எம்.பி!

கல்விக்கட்டணம் செலுத்த இயலாமல் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிற மாணவர்களுக்கு உயர்கல்வி கொடுப்பது அரசின் கடமை. அதற்கான முறையில் கல்விக்கடன் திட்டத்தை உருவாக்கி அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அதன் படிநிலைகளுள் முதலானது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கப்படும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் கல்விக் கனவுகளை பாதித்துள்ளது. எனவே இது குறித்து மதுரை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி இருந்தேன்.

அதன் அடிப்படையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட திட்ட அலுவலர் , முன்னோடி வங்கி மேலாளர், கல்லூரி கல்வி இணை இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாநகராட்சி கல்வி அலுவலர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு :

1) இந்த கல்வியாண்டில் +2 படித்து முடித்துள்ள மாணவர்களுக்கு கல்விக்கடனுக்காக தேவைப்படும் ஆவணங்களை பதிவு செய்து வைப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு அலுவலரை நியமிப்பது.

2)கிராமப்புறத்தில் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்களும், மாநகராட்சி பகுதிகளுக்கான 4 மண்டலங்களுக்கான பொறுப்பாளர்களும் நியமிப்பது.

3)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்விக்கடன்களுக்கான வழிகாட்டும் சேவை மையம் துவங்கிடுவது. அதற்கென தனியான தொலைபேசி எண் , மின்னஞ்சல் முகவரி வெளியிடுவது.

4) ஒவ்வொரு வங்கியின் சார்பிலும் வட்டார அளவில் பொறுப்பாளர்களை நியமிப்பது.

5)இந்தப் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான கூட்டங்கள், பயிற்சிகள் போன்றவற்றை ஒரு வார காலத்திற்குள் நிறைவு செய்வது.

6) இந்த ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு 500 கோடி ரூபாய் உயர்கல்விக்கான கல்விக்கடனாக வழங்குவதை இலக்காக கொண்டு செயல்படுவது.