மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா மக்களை பதற்றத்திலேயே வைத்துக் கொள்ள மத்திய அரசு முயல்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசு அனுப்பும் தீர்மானங்கள் நிலுவையில் இருக்கிறதென்றால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம் என ஆளுநர் பேசியிருப்பதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மத்திய அரசு, தனது பிரதிநிதி மூலமாக மாநில அரசின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாகவே மக்கள் நீதி மய்யம் இதைப் பார்க்கிறது. பல்வேறு விஷயங்களிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி, மாநில மக்களைப் பதற்றத்திலேயே வைத்துக் கொள்ள மத்திய அரசு முயல்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது. தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் பேசியும், செயல்பட்டு வரும் ஆளுநரை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக மாண்புகளைக் கேள்விக்குறியாக்கும் ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.