அண்ணாமலை அறிவுறுத்தல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக தொண்டர்கள் தன்னை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் சர்ச்சைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கடந்த சில காலமாகவே பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலை விஷயங்கள் தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி சர்ச்சையானது. அதை தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்த காய்த்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சமீபமாக பாஜக முன்னாள் பிரமுகர்கள், மாற்று கட்சியினரால் பாஜக தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதற்கு பாஜக தொண்டர்கள் பலரும் கமெண்ட் செய்வதால் ஏற்படும் வாக்குவாதங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

இதுகுறித்து அண்ணாமலை “பலரின்‌ தியாகத்தாலும்‌, பலரின்‌ அயராத உழைப்பாலும்‌ வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? விமர்சனங்கள்‌ நமது கட்சியின்‌ வளர்ச்சிக்கான உரம்‌. ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்‌, அவதூறுகளை ஒதுக்கி தள்ளுங்கள்‌. சமீப காலமாக என்‌ மீது சமூக வலைத்தளங்களில்‌ வைக்கப்படும்‌ விமர்சனங்களுக்கு நமது கட்சியின்‌ சகோதர சகோதிரிகளும்‌ தன்னார்வலர்களும்‌ மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக அறிகிறேன்‌. கட்சியின்‌ தொண்டர்களும்‌ தன்னார்வலர்களும்‌ தங்களது சமூக வலைத்தளங்களில்‌ எதிர்வினையாற்றும்‌ போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்‌. உங்களுக்கு பதில்‌ அளிக்க தெரியாது என்பது பொருள்‌ அல்ல. சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில்‌ அளிப்பதை காட்டிலும்‌ கடந்து செல்வதே ஆக சிறந்தது. மக்கள்‌ பணியில்‌ நாட்டம்‌ கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின்‌ வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும்‌ நீங்கள்‌, நமது கட்சியின்‌ முன்னாள்‌ உறுப்பினர்களுக்கோ, எதிர்கட்சியினரின்‌ வீண்‌ விமர்சனங்களுக்கோ அல்லது சில பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கோ செவி சாய்க்காமல்‌, உங்கள்‌ தொகுதியில்‌ நமது கட்சியின்‌ வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள்‌. விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி உங்கள்‌ கவனத்தை சிதறடிப்பது தான்‌ சமூக வலைதள பரப்புரையாளர்களின்‌ முழு நேர வேலை. நாம்‌ தான்‌ கவனமாக இருக்க வேண்டும்‌. நமது கருத்தில்‌ ஆழம்‌ உள்ளபோது அவதூறுகளுக்கு அவசியம்‌ ஏற்படாது. என்‌ மேல்‌ தினம்தோறும்‌ சமூக வலைத்தளங்களில்‌ அவதூறு பரப்பி வருகின்றனர்‌; சில பத்திரிக்கைகள்‌ என்னை பற்றி அவதூறு பரப்பினால்‌ தான்‌ அவர்களின்‌ பிழைப்பு நடக்கும்‌ என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்‌. இவர்களுக்கு பயந்தால்‌, என்னுடைய கிராமத்தில்‌, நான்‌ ஒடுங்கி கிடக்க வேண்டியது தான்‌. அதை தான்‌ அவர்களும்‌ விரும்புகிறார்கள்‌ என்பதையும்‌ நான்‌ அறிவேன்‌. நமது செயல்பாடுகள்‌ அவதூறு பரப்புவோருக்கு எரிச்சல்‌ தருமேயானால்‌, நாம்‌ சரியான திசையில்‌ பயணிக்கிறோம்‌ என்பதையே அது வெளிக்காட்டுகிறது. உங்கள்‌ கருத்தை முன்வைக்க தயங்காதீர்‌, பகிரங்கமாக உங்கள்‌ கருத்துக்களை முன்‌ வையுங்கள்‌! அதே சமயம்‌, அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாக கொண்டு இயங்கி வரும்‌ சிலருக்கு பதில்‌ அளித்து உங்கள்‌ நேரத்தை வீணடிக்காமல்‌ கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள்‌” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.