இட்லி பாட்டியை நலம் விசாரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

Filed under: தமிழகம் |
கோவை, ஏப்ரல் 26
வே. மாரீஸ்வரன்
 
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இட்லி பாட்டியுடன் செல்போன் வீடியோ காலில் தொடர்புகொண்டு நலம் விசாரித்த விவகாரம் தற்போது தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சலசலப்பை உருவாகியுள்ளது.
 
சரி, நடந்து முடிந்த சம்பவத்திற்கு செல்வோம், 
ஒரு ரூபாய் இட்லி என்றால் நம் கண்முன்னே வந்து செல்பவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலந்துறை அருகேயுள்ள உள்ள வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இட்லி பாட்டி என்று அழைக்கப்படும் கமலாத்தாள் என்பவர். இந்த இட்லி பாட்டி என்றாலே கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் நன்கு பரிச்சயமானவர். தள்ளாத வயதிலும் எவ்வளவு புகழ் வந்தாலும் யதார்த்தமாக நம்மைப் பார்த்து கையசைத்து ஒரு குழந்தையை போல் துள்ளிக் குதித்து வந்த இட்லி பாட்டியை நம்மாலும் மறக்கமுடியாது.
 
ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டுவரும் இந்த நேரத்தில் நாடே ஸ்தம்பித்து இருக்கும் சூழலில் ஒரு கிராமத்தில் பம்பரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி. வெளியூரிலிருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருந்து வந்தவர்கள் என்று தினமும் 400 பேருக்கு மேல் உணவு அளித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக சற்று விலைவாசி உயர்வால் இட்லி பாட்டிக்கு தேவையான பொட்டுக்கடலை. உளுந்து, மிளகாய் போன்ற பொருட்களின் விலையும் அதிக விலைக்கு விற்கப்படும் சூழ்நிலையில் கூட, தனது புன்னகை மாறாமல் எப்படியோ சமாளித்து தனது ஒரு ரூபாய் இட்லிக்கு எந்த பாதிப்பும் வராதபடி பொதுமக்களுக்கு ஒரு ரூபாய் இட்லி வழங்கி கொண்டு வருகிறார்.
 
தனது, 85 வயதிலும் கூட சுறுசுறுப்பாக இட்லி பாட்டி கமலாத்தாள் இட்லி வியாபாரத்தை கவனித்து வரும் சூழ்நிலையில் அவருக்கு அரிசி, பருப்பு, மற்றும் மளிகை சாமான்களை சில தன்னார்வலர் இளைஞர்கள் இலவசமாக கொடுத்து அவரை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். கடந்த 25 4 2020 அன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் நாம் இட்லி பாட்டி கமலாத்தாள் வீட்டிற்கு நேரடியாகச் சென்றோம். அப்போது செல்போனில் வீடியோ காலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இட்லி பாட்டியுடன் தொடர்புகொண்டு உங்க பேரு என்னமா.? என்று கேட்டதற்கு கமலாத்தாள் என்று பதில் கூறினாராம். பின்பு, உங்க கூட யார் இருக்காங்க என கேட்ட பொழுது தனது மகன் மற்றும் பேரனுடன் இருப்பதாக இட்லி பாட்டி பதிலளித்துள்ளார். உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா.? என்று மு. க. ஸ்டாலின் கேட்டபோது  சேனாதிபதி எனக்கு அரிசி பருப்பு கொடுத்தார்கள் என்று இட்லி பாட்டி கூறினாராம். மேலும், உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள் என்று மு க ஸ்டாலின் கேட்க சரி என்று கூறினாராம் இட்லி பாட்டி கமலாத்தாள்.
 
தி.மு.க. தலைவர் தளபதி மு. க. ஸ்டாலினிடம் பேசிவிட்டு வந்த இட்லி பாட்டிகாக நாம் வீட்டில் வெளியே காத்திருந்தபோது இந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் காய்கறிகள் கொண்டுவந்து வழங்கினார்.
 
நம்மிடம் பிரசாத் உத்தமன் பேசும்போது,
இட்லி பாட்டியைப் பற்றி கேள்வி பட்டதாகவும் 85 வயதிலும் அன்னதானம் செய்து வருவது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். கொரோனா வைரஸ் தோற்று எதிரொலியால் மளிகை பொருட்களின் விலை ஏற்றத்தில் அதை சமாளித்து வருவது பாராட்டத்தக்கது என்றார். இட்லி பாட்டிக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை எனது நிறுவனத்தின் மூலம் வழங்கியிருக்கிறேன். அத்துடன், மேலும் உதவிகள் தேவைப்பட்டால் இட்லி பாட்டிக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன் என்று நம்மிடத்தில் கூறினார் இந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன்.
கொரோனா வைரஸ் தொற்று கோவை மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி அப்பாவி பொது ஜனங்களுக்கு  இலவசமாக உணவளித்து வந்தாலும், இதில் இந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் முதன்மை ஆணையர் பிரசாத் உத்தமன் தனது இயக்கத்தை ஒருங்கிணைத்து மலைக்கிராம மக்களுக்கும் நகர்ப்புறத்தில் உள்ள மக்களுக்கும் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி தனது இயக்கத்தின் பெயரை முதல் இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.!