ஒப்பந்ததாரர்களை நடுத்தெருவுக்கு தள்ளும் வெளி வியாபாரிகள்!

Filed under: தமிழகம் |

KA Singar entranceஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோவில் அவலம்!
திருச்சியில் முதல்வர் அம்மா அவர்களின் ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைந்துள்ளது சிங்கபெருமாள் கோவில். இந்த கோவிலின் சிறப்பு எண்ணற்றது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, இந்த கோவிலில் விளக்கு உட்பட வழிபாட்டு பொருள்கள் விற்பதற்கு என்று தேவஸ்தான பழக்கடை என்று, ஒரு வியாபாரிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு இந்த ஆண்டு ரூபாய் 10 லட்சங்கள் ஆகும். இந்த ஒப்பந்தம் ஸ்ரீரெங்கம் அம்மா மண்டபம் புது தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட ஒப்பந்த பணிகள் என்னவென்றால் பக்தர்களுக்கு கோவில் வழிபாட்டு பொருள்கள் விற்பது மற்றும் கோவிலின் உள்ளே வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு டோக்கன் போட்டு ஒழுங்கு படுத்துவது போன்ற பணிகள்.
இந்த ஒப்பந்தம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கோவிலுக்கு வெளியே முறைகேடாக வியாபாரம் செய்ய அனுமதித்து கொண்டு இருக்கின்றனர் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்.
இத்தகைய வியாபாரிகளின் வியாபாரத்தால் ஒப்பந்தம் பெற்றவர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொதுமக்களும் பக்தர்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய வியாபாரிகளின் வியாபாரத்தின் மூலம் பெரிதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோவிலுக்கு வெளியே அனுமதி இன்றி வியாபார ராஜ்ஜியம் நடத்தி கொண்டு இருக்கின்றது எடத்தெரு சீனிவாசன் ஆட்டோ டிரைவர் சேட்டு உள்ளிட்ட கும்பல். அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு, படுஜோராய் வியாபாரம் நடத்தி கொள்ளை லாபம் பெறுகின்றனர். இந்த கொள்ளை லாபத்திற்கு துணை புரிந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் மாதம் தோறும் ஒரு பங்கு ஒதுக்கி தருவதாக கோவில் ஊழியர்கள் பேசிக்கொள்கின்றனர்.
இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அளவிற்கு ஆகிவிட்டது சிங்கபெருமாள் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில்.
இதுகுறித்து தேவஸ்தான பழக்கடை ஒப்பந்ததாரர் கமலக்கண்ணன் என்பவரை நாம் தொடர்புகொண்டு, கேட்டபோது, அவர் நம்மிடம் கண்ணீருடன் கூறியது, “நான் கடந்த வருடம் ரூபாய் 15 லட்சங்களுக்கு ஒப்பந்தம் எடுத்து ரூபாய் 8 லட்சம் அளவிற்கு நஷ்டம் அடைந்தேன். இதற்கு காரணம் அனுமதி இன்றி நடக்கும் வியாபாரம்தான் மீண்டும் இந்த வருடமும் நான் மீண்டும் 10 லட்சத்திற்கு ஒப்பந்தம் எடுத்து உள்ளேன்” என்றார்.
நாம் கமலக்கண்ணனிடம் நீங்கள் கடந்த ஆண்டு 15 லட்சங்களுக்கு ஒப்பந்தம் எடுத்து இந்த ஆண்டு 10 லட்சத்திற்கு ஒப்பந்தம் எடுக்க காரணம் என்ன என்று கேட்டோம். “இதற்கு காரணம் முறைகேடான வெளி வியாபாரத்தால் ஏற்படும் நஷ்டத்தினால் தான் ஒப்பந்த மதிப்பு 10 லட்சமாக குறைக்கப்பட்டது. இதன் மூலம் அரசிற்கு ரூபாய் 5 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வருடமும் வெளிவியாபாரிகளின் தொல்லை தொடர்ந்தால் நான் நஷ்டம் அடைவது உறுதி என்றும் இதன் மூலம் எனது குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்கும் என்றும் முதல்வர் அம்மா அவர்கள் வெளிவியாபாரத்தை கட்டுப்படுத்தி என்னையும் எனது குடும்பத்தையும் காக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த முறைகேடான வியாபாரத்தை தடுக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோட்ட தலைவர் லதா, இணை ஆணையர் கல்யாணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்பதே நிதர்சனமான உண்மை.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன? சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைகேடான வியாபாரத்தில் பங்கு வருகிறதா? என்ற கேள்வி சாமானியர்களுக்குகூட எழத்தான் செய்யும்!
இவர்கள் யாரிடம் இருந்து தப்பினாலும் முதல்வர் அம்மா அவர்களிடம் இருந்து தப்பமுடியாது என்பதே உண்மை!
– ராமு