காங்கிரஸ் – பா.ஜ.க. போடும் தப்புதாளங்கள்!

Filed under: அரசியல்,இந்தியா |

Rahul_Modi2நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் கட்சிகளை அதிரவைத்துள்ளதாம். காரணம் இந்திய மக்களின் விழிப்புணர்வு தற்போது அதிகம் கிராமங்களில் தென்படுகிறதாம். இதனால் கடும் பீதி அடைந்த இந்திய அரசியல் கட்சிகள், தங்களுக்குள் முடிவு எடுக்க முடியாமல் திணறுகின்றன. காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை முன்நிறுத்த மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாம். காரணம் காங்கிரஸ் இளவலின் அதிரடி அரசியல் பேச்சுக்கள், இந்திய மக்களை பிளந்து விடும் நிலையில் உள்ளதாக கூறுகின்றன
ராகுல்காந்தியை வைத்து அரசியல் நடத்தும் காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரசின் அஸ்திவாரத்தை ஆதாரத்தை தளர்த்து விட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்திய மக்களின் கணிப்பு ராகுல்காந்திக்கு ஆதரவாக இல்லை என்பதே உண்மையாக உள்ளதாம். காங்கிரஸ் தலைவியின் உடல் நலக்குறைவு, பிரதமரின் நிர்வாக திறமையின்மை, ராகுலின் அரசியல் தேர்வு பெறாத நிலை போன்ற காரணங்கள் காங்கிரசின் ஆதரவை வரும் மாதங்களில் மேலும் குறைத்துவிடும் என்ற கணிப்பு உள்ளது.
அடுத்தது பா.ஜ.க. நரேந்திரமோடியை தனிமைப்படுத்தி வெற்றிபெற முடியாத நிலையில் உள்ளது. காரணம் தற்போது பா.ஜ.க.வில் இந்திய மக்களை ஈர்க்கக்கூடிய தலைவர்கள் இல்லை என்பதே உண்மை. சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு போன்ற தலைவர்கள் மக்களின் செல்வாக்கை பெறாத தலைவர்கள். இவர்கள் அடிக்கடி அரசியலில் பின்புறமான ராஜ்யசபா மூலம் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள். முரளி மனோகர்ஜோஷி, அத்வானி, ரவிசங்கர் பிரசாத் போன்ற தலைவர்கள் சற்று அரசியல் வலிமை உடையவர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் ஒற்றுமை இருப்பதில்லை என்பதே உண்மை.
இதனால் எதிர்பாராத விதமாக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் வருகை மற்ற தலைவர்களை ஒன்றுசேர வைத்துள்ளது. மோடியை வைத்து அரசியல் வியாபாரம் நடத்தி, அதில் வெற்றி பெற்று, பின்பு மோடியை ஒதுக்கிவிடும் சூழ்நிலையும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் மேற்கு மாநிலங்கள், கிழக்கு மாநிலங்கள் மோடிக்கு ஆதரவாக உள்ளன. தென்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், வடமாநிலங்கள் மோடிக்கு அதிக ஆதரவை கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாக அரசியல் கணிப்பு உள்ளது.
மோடி பிற்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர். சுமார் 200 பாராளுமன்ற தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினரின் ஆதரவைக்கொண்டு வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் நிலையில் உள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும் உத்திரபிரதேச முலாயம்சிங் யாதவ்வுக்கு வடமாநில மக்களிடையே சற்று செல்வாக்கு கூடி இருப்பதாக கூறுகிறார்கள்.
நாளைய பாராளுமன்ற தேர்தலில் முலாயம்சிங் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெறக்கூடிய நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது 3வது அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் முலாயம்சிங் பிரதமராவதை விரும்பவில்லை என்ற கருத்து உலவுகிறது. காரணம் முலாயம்சிங் இந்திய பிரதமரானால் உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, உத்ராஞ்சல், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் வலிமை குறையும்.
மேலும் தாகூர், ஜாட் இனத்தினர் முலாயம்சிங் யாதவ் கட்சிக்கு மெருகேற்பதால், அக்கட்சியின் வளர்ச்சியை தடுக்க பல வருடங்கள் ஆகும் என்ற புதிய அரசியல் கணக்கு போடப்படுகிறதாம். இதனால் காங்கிரஸ் எதிர்காலத்தில் முலாயம்சிங் யாதவை பிரதமராக்க, கடும் முன் எச்சரிக்கையில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அடுத்தது காங்கிரசின் அடுத்தகுறி தமிழக முதல்வர் மீது படர்ந்து உள்ளதாம். காரணம் இந்திய அளவில் சுமார் 35 பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றப்போகும் ஒரே இந்திய தலைவர் தமிழக முதல்வர்தான் என்று கூறுகிறார்கள். மேலும் தமிழகத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் பூதக்கண்ணாடி கொண்டு தேடும் நிலையில்தான் தற்போது இருக்கின்றன.
கேப்டன் என்ற பெயர் கொண்ட நடிகர் விஜயகாந்த், தன்னுடைய அரசியல் கப்பலை எந்த பக்கமும் நகர்த்த முடியாமல் தவிப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக சிறு கட்சிகள் தனிமையில் புலம்பும் நிலைக்கு வந்துள்ளதாகவும் செய்திகள் பரவுகின்றன.
புரட்சித்தலைவியின் அரசியல் எழுச்சி தங்களுக்கு தென்இந்தியாவில் அதிக பலன்களை கொடுக்கும் என்ற அரசியல் கணக்கை காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் போடுவதாகக் கூறப்படுகிறது.