கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. விழாவின் தொடக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை ஜோதியை ஏற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரதமர் மோடி துவங்கி வைத்தார். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசை வழங்கினார். நிகழ்ச்சியில், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், மான்கொம்பு, களரி, குத்து வரிசை, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. கேலோ இந்தியா தொடக்க விழா நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என 12,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டி இன்று தொடங்கி 31ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளன. சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய தமிழ்நாட்டின் 4 நகரங்களில் கேலோ இந்தியா போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 18 வயதிற்கு உட்பட்ட 6000 வீரர்கள், வீராங்கணைகள் பங்கேற்கின்றனர். கேலோ இந்திய விளையாட்டு போட்டிக்கான தமிழ் பாடல் நடனத்துடன் நடைபெற்றது.