கேள்விக்குறியான அதிமுக பொதுக்குழு!

Filed under: அரசியல் |

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்ற கேள்வி அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்து மோதல் நிலவி வருகிறது. இதற்கு முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்தது. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர ஈபிஎஸ் தரப்பு முயன்ற நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறினர். வரும் திங்கள்கிழமை (11.07.2022) அன்று மீண்டும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை வானகரத்தில் மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் வெகுவாக நடந்து வருகிறது. பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில் பொதுக்குழு நடத்துவது குறித்தும், பொதுசெயலாளர் தேர்வு குறித்தும் கட்சி நடைமுறை என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ பன்னீர்செல்வம் தரப்பும் காரசாரமான விவாதங்களை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை ஜூலை 11 காலை 9 மணிக்கு அறிவிப்பதாக கூறி தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்துள்ளார். தீர்ப்பு வெளியாக உள்ள அதே 11ம் தேதிதான் பொதுக்குழு நடத்துவதற்கும் ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் செய்துள்ளனர். இதனால் பொதுக்குழு நடத்த சாதகமான தீர்ப்பு கிடைக்குமா என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆழ்ந்த குழப்பத்தில் உள்ளனர்.