கொரோனா நிவாரணம் : மனிதநேய வட்டாட்சியர் மகேஷ்குமார்!

Filed under: தமிழகம் |
கோவை, ஏப்ரல் 21
வே.மாரீஸ்வரன்
 
கோவையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த பிரகாஷ் பிழைப்பு தேடி தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் தன் கைக்குழந்தையுடன் கோவை துடியலூர் அருகே உள்ள கவுண்டர்மில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தனர்.
 

தற்போது 144 தடை உத்தரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் அவர் பணிபுரிந்த மில் இழுத்து மூடப்பட்டது. வேலையில்லாத காரணத்தினாலும் வருமானமின்றி அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில், அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல புறப்பட்டனர். கேரள மாநிலம் எல்லையான வாளையார் வரை சென்றபோது, கேரள போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கேரளாவிற்குள் அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

நிவாரண பொருட்களை முதுகில் சுமக்கும் வட்டாட்சியர் மகேஷ்குமார்

 
செய்வதறியாமல் திகைத்து நின்ற இவர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது ஏழ்மை நிலைமையை விவரித்து இவர்கள் வெளியிட்ட வீடியோ பதிவு கோவை மாவட்டத்தில் வைரலாக பரவியது. இந்த தகவலை சமூக வலைத்தளம் மூலம் அறிந்த கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார். உடனடியாக சரவணம்பட்டி காவல் துறையினருடன் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட நபரான பிரகாசுக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை பெற்றுத்தர  நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தார்.
 
இதனைத்தொடர்ந்து சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் தனியார் நிறுவனத்தில் பிரகாசுக்கு கொடுக்கவேண்டிய ரூபாய் 13 ஆயிரத்தை தனியார் மில் முதலாளியிடம் பேசி பெற்றுக் கொடுத்தனர். அத்துடன் ஊரடங்கு உத்திரவு முடியும்வரை அந்த தனியார் மில்  குடியிருப்பில் பிரகாஷ் குடும்பத்தினர் தங்கிக் கொள்ளவும் அத்துடன் அவர்களுக்கு தேவையான உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. சரியான நேரத்தில் மனிதநேயத்துடன் செயல்பட்ட கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார் மற்றும் கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் திக்குத் தெரியாமல் பட்டினி பசியால் நாட்களை நகர்த்தி வந்த பிரகாஷ் தம்பதியினருக்கு உதவி செய்ததை பல தரப்பிலும் இருந்து வரும் பாராட்டு மழையில் நனைந்து கொண்டே இருக்கிறார்கள்.
 

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்

 
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஏழ்மையில் நலிவடைந்த நிலையில் இருக்கும் இயல், இசை, நாடக கலைஞர்களின் குடும்பத்திற்கு தேவையான  மளிகை பொருட்களை ஸ்டீர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமாரிடம் கோவை நேரு கல்வி குழுமம் மக்கள் தொடர்பு முரளிதரன் வழங்கினார்.
 
இந்நிகழ்ச்சியில் குனியமுத்தூர் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ரங்கதுரை. சிங்காநல்லூர் ஸ்கந்தா ஹோட்டல் தேவராஜ் பழனிச்சாமி. ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலிவடைந்த இசைக் கலைஞர்களின் குடும்பத்திற்கு தேவையான நிவாரண பொருட்களை ஷெரிப், மற்றும் குறிச்சி சுரேஷ் தலைமையில் வழங்கப்பட்டது.