சரத்குமார் – ராதாரவி கைது ஆகிறார்கள் – சங்க தலைவர் நாசர் பேட்டி!

Filed under: சினிமா |

DSC00826தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நாசர், சரத்குமாரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சூழ்நிலையில் பரபரப்பாக இயங்கிய போதிலும் நவீன நெற்றிக்கண் வார இதழுக்கு பேட்டி என்றதும் உடனே மகிழ்ச்சியுடன் வாருங்கள் என்றார்.

வடபழனியில் ‘யு’ டி.வி. தனஞ்செயன் நடத்தும் திரைப்பட பயிற்சி பள்ளியில் மேல் தளத்தில் அங்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த நாசர் நம்மை பார்த்ததும் அவர்களை போகச்சொல்லிவிட்டு, நம்மிடம் பேசத்தொடங்கினார்.
“நடிகர் சங்க கட்டிட ஒப்பந்தம் குறித்து கேட்டபோது, சரியாக பதில் சொல்லாத ராதாரவி என்னை மிரட்டினார். கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் நான் பயப்படுவேன் என்று நினைத்தார். என்னை சத்தியம் செய்யும்படி சொன்னார். இறைவன் பெயரால் சத்தியம் செய்கிறேன் ராதாரவி ஒரு பொய்யர் என்றேன். அது நடந்து முடிந்த விவகாரம். மீண்டும் தொடர விரும்பவில்லை.

இப்போது பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நலிந்த நாடக நடிகர்களுக்கு உதவி என்பதைவிட நாடக நடிகர்களுக்கு உதவி, வேலை வாய்ப்பு என்றுதான் சொல்வேன். நலிந்த என்ற வார்த்தையே தவறானது.
அரசு பொருட்காட்சிகளில் தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நாடக நடிகர்களுக்கு உரிய சம்பளம் தந்து நாடகம் நடத்த அரசை கேட்டுக்கொள்வோம். பாரம்பரியம் மிக்க சங்கரதாஸ் அவர்களின் நாடகங்களை வித்தியாசமான முறையில் நடத்த ஆவன செய்வோம்.

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவை சந்திக்க கடிதம் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக அவரை சந்திப்போம். சினிமா உலகத்தை தன்னுடைய தாய் வீடு என்று ஆரம்பம் முதலே சொல்லியிருக்கிறார் அம்மா.

அதுமட்டுமல்லாமல் வேறு எந்த பாராட்டு விழாவையும் ஏற்காமல் பிலிம் சேம்பர் நடத்திய பாராட்டு விழாவை மட்டும் ஏற்றுக்கொண்டதிலிருந்து சினிமா உலகத்திற்கு அவர் எத்தகைய கௌரவத்தை கொடுத்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
நடிகர் சங்க தேர்தலில் அ.தி.மு.கவைச் சேர்ந்த யாரும் போட்டியிட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதால் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. கௌரவமாக போட்டியிடாமல் இருந்திருக்கலாம். தன்னை அ.தி.மு.க. என்று சொல்லிக்கொள்ளும் ராதாரவியும் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவரும் 30 ஆண்டுகாலம் நடிகர் சங்கத்தில் தலைவர், செயலாளர் என்று தொடர்ந்து பதவியில் இருந்ததால் ஒதுங்கியிருக்கலாம். (இருவரும் அப்படி செய்யாததால் அவர்கள் அம்மாவின் சொல்லை மதிக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரியும்.)
(நடிகர் சங்கத்திற்கும் சத்யம் நிறுவனத்துக்கும் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னால் ரத்து செய்து விட்டோம் என்று இப்போது சரத்குமார் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். (ஆனால் தேர்தல் முடிந்த பிறகு இதை ஏன் சொன்னார் என்பதும் இத்தனை நாள் ஏன் மறைத்தார் என்பதும் புரியவில்லை.)

இனிமேல் நடிகர்கள் அனைவரும் ஒரே இனம், ஒரே சங்கம் என்ற அடிப்படையில் செயல்படுவோம். நடிகர் சங்கத்தில் சாதி, மதம், இனம், அரசியல், ஆகியவற்றிற்கு துளியும் இடமில்லை. இந்திய சினிமாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழும்.

பதவியேற்று முதல் பொதுக்குழு முடிந்தபின் பத்திரிகையாளரிடம் பேசலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பாண்டவர் அணி வெற்றிபெறும் என்ற செய்தியை பிரசுரித்து எங்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திய ஒரே பத்திரிகை நவீன நெற்றிக்கண். அதனால் பேட்டி என்றதும் சம்மதித்தேன்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக நான்கைந்து திட்டங்கள் இருக்கின்றன. நட்சத்திர நடிகர் & நடிகைகளிடம் நன்கொடை திரட்டுவது, நட்சத்திர நடிகர் & நடிகைகளை நடிக்கவைத்து (சம்பளம் இல்லாமல்) அந்த படத்தின் மூலம் கிடைக்கும் தொகையை கட்டிடம் கட்ட பயன்படுத்துவது இப்படியாக பல வகையில் சிந்தித்து வருகிறோம்.

கட்டிட ஒப்பந்தம் காலாவதியானது உறுதிசெய்யப்பட்டதும் பூச்சி முருகன் தன்னுடைய வழக்கை வாபஸ் பெறுவார். எந்த தடையும் இல்லாமல் அனைவருடைய ஒப்புதலோடும் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும். மேற்கண்ட பணிகளுக்கு அரசின் ஒத்துழைப்பும் அனுமதியும் தேவை.

எனவே விரைவில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நாங்கள் சந்திப்போம். எங்களுடைய கோரிக்கைகளை முழுமையாக தெரிவித்து அவர்களுடைய ஆசிபெற்று நடிகர் சங்கத்தின் தேவைகளை முழுமையாக பூர்த்திசெய்வோம். எங்கள் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்…”

இந்த சிறப்பு பேட்டியின்போது, நவீன நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி அவர்களுடன் நமது சினிமா நிருபர் ‘பயில்வான்’ ரங்கநாதன் உடனிருந்தார்.

டெய்ல்பீஸ் : நாம் கூறியபடியே வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் பதவியேற்று விழாவில் கலந்து கொண்ட முக்கிய நடிகர்கள் சிலர் இதுவரை சரத்குமார் – ராதாரவி தலைமையிலான அணியினர் நடிகர் சங்கத்தில் செய்த ஊழல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதோடு, இதில் தொடர்புடைய சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் ஆகியோரையும் கைது செய்தால்தான் நம்மை நம்பி வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்!

ஆக சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் இம்மூவரும் கைது ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது!