சர்ச்சைக்கு விளக்கமளித்த பாடகி!

Filed under: சினிமா |

“என்ஜாய் எஞ்சாமி” பாடலை பாடிய தீ சமீபத்தில் பாடல் பற்றிய சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார்.
“அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்குமே உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார் பாடகி தீ.

“எஞ்சாய் எஞ்சாமி” பாடலை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் யுடியூபில் வெளியானது. இப்பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுதினார். தீ அவருடன் இணைந்து பாடியிருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா ஸ்டூடியோவின் இணையப்பக்கத்தில் பாடல் வெளியானது. வெளியானதிலிருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது. சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் பாடலின் தொடக்க விழாவில் இப்பாடல் பாடப்பட்டது. ஆனால் அதில் அறிவு கலந்து கொள்ளவில்லை. பாடகி தீ கலந்துகொண்டார். அறிவின் வரிகளை மாரியம்மாள் பாடினார். அப்போதே இதுகுறித்து சர்ச்சைகள் ஆரம்பமானது. பலரும் அறிவு ஏன் கலந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்காக தான் எடுத்த முயற்சிகளைக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. ‘என்ஜாய் எஞ்சாமி’ எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.