தனியா இருக்கும் பெண்கள் டார்கெட்..!

Filed under: தமிழகம் |

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் மாவிலை கேட்பது போல சென்று திருடி வந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ராணி என்ற 55 வயதான பெண் தனது வீட்டில் தனியே இருந்துள்ளார். அவரது கணவரும், மகனும் வெளியே வேலைக்காக சென்றிருந்த நிலையில் அவர்களது தூரத்து உறவினர் என சொல்லிக் கொண்டு 50 வயது நபர் ஒருவர் வந்துள்ளார். வீட்டு கிரஹபிரவேசத்திற்கு பத்திரிக்கை வைத்த அவர், வீட்டு வாயிலில் கட்ட மாவிலைகள் வேண்டும் என கேட்டுள்ளார். தோட்டத்திற்கு சென்று ராணி மாவிலைகளை பறித்துக் கொண்டு வந்த பார்த்தபோது பத்திரிக்கை கொடுத்த ஆசாமியையும் காணவில்லை, ராணி பீரோவில் வைத்திருந்த நகைகளையும் காணவில்லை. இதுதொடர்பாக ராணியின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ராணி வீட்டில் கொள்ளையடித்தது பிரபல மாவிலை திருடன் முத்துகிருஷ்ணன் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மாவிலை முத்துகிருஷ்ணன் தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் என பல பகுதிகளில் பெண்கள் தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு உறவினர் போல சென்று பேசி நம்ப வைத்து மாவிலை கேட்பார். அவர்கள் பறிக்க செல்லும் நேரத்தில் நகை, பணத்தை திருடிக் கொண்டு சென்றுவிடுவார். முன்னாள் ரயில்வே ஊழியரான இவர் மீது இப்படியாக மாவிலை கேட்டு திருடிய வழக்குகள் பல நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் மாவிலை முத்துக்கிருஷ்ணனை கும்பகோணம் மருத்துவமனை ஒன்றில் வைத்து கைது செய்தனர். வீட்டில் இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.