தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை: கோட்டையில் இன்று 15 துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை !

Filed under: தமிழகம் |

6789071883_9bd21c9cfc_zதமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் அதைச் சமாளிக்க தயார் நிலை யில் இருப்பது தொடர்பாக 15 துறைகளைச் சேர்ந்த உயகரதிகாரி களுடன், தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், ராணுவ அதிகாரிகள், வானிலை மைய அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக்காலத் தில்தான் அதிக மழை கிடைக்கும். அப்போது, பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும். ஏரிகளில் கரை உடைந்து ஊருக்குள் நீர் புகுந்துவிடும். சாலைகள் உடைந்து, போக்குவரத்துத் துண்டிக்கப்படும். சென்னை போன்ற நகரங்களில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் சாலைகளில் நீர்தேங்கி பொதுமக்களுக்குப் பெரும் இடையூறும் ஏற்படும். அதனால், வடகிழக்குப் பருவமழைக்காலங்களில், மாநில அரசின் வழிகாட்டுதலின்படி வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் வெள்ளம் போன்ற பேரிடர் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதைச் சமாளிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் இருப்பார்கள். இதுபோல் மாவட்ட நிர்வாகங்களும், தங்களது ஊழியர்களை தயார்நிலையில் வைத்திருக்கும்.

கோட்டையில்…

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோ பர் இரண்டாம் வாரத்தில் தொடங்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவ மழைக்காலத்துக்கான முன்னேற் பாடுகளை ஆய்வு செய்வதற்காக முக்கியக் கூட்டம், இன்று மதியம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமை யில் நடக்கும் இக்கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தி இந்து நிருபரிடம் நேற்று தெரிவித்ததாவது: வடகிழக்குப் பருவமழைக்காலத் தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி வருவாய், பொதுப்பணித்துறை,, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், போக்குவரத்து, சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி, உணவு, நெடுஞ்சாலை கள் உள்ளிட்ட 15 துறைகளின் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் இன்று மதியம் 3 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார். வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர், மழைக்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பார். இக்கூட்டத்தில் ராணுவ அதிகாரிகள், சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் பங்கேற்பார்கள்.

பேரிடர் மற்றும் வெள்ளத்தைச் சமாளிக்க ஊழியர்களுக்கு அளிக்கப்படவேண்டிய பயிற்சிகள், மீட்புக் கருவிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனவா, மழைநீர் வெள்ளத்தை வெளியேற்ற என்ன வழிவகைகள் கையாள உத்தேசிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும். அவர்கள் தரும் பதில்களை வைத்து மேற்கொண்டு விளக்கங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

வானிலை மைய அதிகாரிகள், மழை பற்றிய எச்சரிக்கைத் தகவல்களை ஒருநாள் முன்கூட்டியே தமிழக அரசுக்குத் தரவேண்டும், பெருவெள்ளம் ஏற்பட்டால் ராணுவம் எவ்வகையில் மாநில அரசுக்கு உதவவேண்டும் என்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.