தர்காவாக மாறிய ராணிமங்கம்மாள் சத்திரம்! அ.தி.மு.க.வினர் ஆக்ரமிப்பில் வேடசந்தூர் கோட்டை விநாயகர்கோவில்!

Filed under: தமிழகம் |

Vedasanthoreஅ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு கோவில் இடங்களை ஆக்ரமிப்பது என்பது வெகுவாக குறைந்துள்ளது என்று சொல்லப்படும் வேளையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அதே அ.தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி சேர்மன், கவுன்சிலர்கள் கூட்டணியால் புகழ்பெற்ற கோவிலும் அதன் இடங்களும் லபக்கப்பட்டு வருவதாக நமக்கு தகவல் கிடைக்கவே விசாரணையில் இறங்கினோம்.
ராணிமங்கம்மாள் காலத்தில் பழனிக்கு பாதயாத்திரை செல்பவர்கள் ஓய்வு எடுத்து செல்வதற்காக ஒவ்வொரு 6 கிலோ மீட்டருக்கும் ராணிமங்கம்மாள் சத்திரம் என்று அமைத்தனர். அதில் வேடசந்தூரில் கோட்டை விநாயகர் கோவிலை உள்ளடக்கிய சத்திரம் இருந்தது. இங்கு வரும் பக்தர்கள் ஓய்வு எடுத்து, குளித்து முடித்து, கோட்டை விநாயகரை வணங்கிவிட்டுச் செல்வார்கள்.பிறகு இஸ்லாமியர் ஆட்சியின்போது இந்த சத்திரத்தை கைப்பற்றி தர்காவாக மாற்றிவிட்டனர். கோட்டைவிநாயகர் கோவில் மட்டும் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் சிலைகள் சேதமடைந்து கேட்பாரற்று கிடக்கவே, களத்தில் இறங்கிய ரியல் எஸ்டேட் புள்ளிகள், கோவிலின் இடத்தை வளைக்க திட்டம்போட்டு செயல்படுகின்றனர்.பேரூராட்சி சேர்மனும் நகர செயலாளருமான அ.தி.மு.க.வைச் சேர்ந்த முத்தலிப் உடந்தையோடு அவரது உறவினர்களும் அ.தி.மு.க. பிரமுகர்களுமான கவுன்சிலர் சாகுல், சாதிக் மற்றும் முருகபாண்டி ஆகியோர் களத்தில் இறங்கி உள்ளனர். முதற்கட்டமாக கோவிலின் சுற்றுபுறத்தில் இருந்த முள் மரங்களை வெட்டி தள்ளி உள்ளனர். கேட்டால் கோவிலை சுத்தம் செய்யப் போகிறோம் என்கின்றனராம்.
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை யார் சொல்லி இவர்கள் சுத்தம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் தம்மணம்பட்டி கிராமத்தில் இதே கோவிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் இடம் உள்ளது. அதுவும் இன்னொரு கும்பலின் பிடியில் சிக்கி உள்ளதாம்.
இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத்தின் மாவட்ட இணை அமைப்பாளர் சரவணன் நம்மிடம் கூறும்போது:
கோவிலை சுத்தம் செய்வது, மரங்களை வெட்டுவது என்பது அறநிலையத்துறையின் அனுமதியோடுதான் செய்யவேண்டும். ஆனால் இவர்கள் யாரையும் கேட்காமல் செய்கின்றனர். கோவில் இடங்களை முறையாக குத்தகைக்கு விடுவதில்லை. ஏற்கனவே ராணி மங்கம்மாள் சத்திரம் தர்காவாக மாறிவிட்ட நிலையில், இருக்கும் கோவிலையாவது பாதுகாக்க வேண்டும். அதற்கு உடனடியாக சுற்றுச் சுவர் எழுப்பி கோவில் நிலங்களை மீட்கவேண்டும். இதேபோல் வேடசந்தூர் பகுதியில் நிறைய இடங்கள் ஆக்ரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. அவற்றை கண்காணித்து அறநிலையத்துறை மீட்கவேண்டும். இல்லையென்றால் இந்து அமைப்புகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார் சரவணன்.