திருட்டு நகையை திருடிய பெண் போலீஸ்!

Filed under: தமிழகம் |

கோவை, ஜூன் 3 

கோவை மாநகர காவல்துறையில் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ஸ்வப்னா சுஜா, இந்த காவல் நிலையத்தில் நீதிமன்றம் தொடர்பான பணியை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் பதினோரு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 சவரன் நகையை போலீசார் மீட்டனர். இதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணி ஸ்வப்னா சுஜாவிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், நகைகளை நீதிமன்றத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதுகுறித்து காவல் நிலைய அதிகாரிகள் கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததோடு உயரதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி நழுவி வந்துள்ளார். நீண்ட நாட்களாக நகைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க படாமல் இருந்த சூழலில் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் ஸ்வப்னா சுஜாவிடம் விசாரணை மேற்கொண்டார். இதனால் பயந்து போன பெண் காவலர் நீண்ட நாள் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து ஸ்வப்னா சுஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சூழலில் ஸ்வப்னா சுஜாவை சிங்காநல்லூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஒப்படைக்க படாத நகைகள் என்ன ஆனது.? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக வழக்குகளில் தொடர்புடைய 50 சவரன் நகைகளை திருடிய இந்த கில்லாடி பெண் போலீஸ் நடந்துகொண்ட விதம் ஒட்டுமொத்த கோவை மாநகர காவல் துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையில் பணிபுரியும் சில நேர்மையான அதிகாரிகள் நம்மிடத்தில் இத்தகவலை பதிவு செய்கிறார்கள்.