குறிப்பிட்ட பகுதிகளில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து, அவற்றின் வாழிட பரப்பு குறைந்த சூழலில் ‘புலிகள் – மனிதன் மோதல்’ மற்றும் புலிகள் வேட்டை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்தத் திட்டம் தீர்வாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பில் இந்தியாவில் 1706-ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, 2014-ம் ஆண்டு 2,226 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 520 புலிகள் அதிகரித்துள்ள நிலையில் அரசு இந்த முடிவை எடுத் துள்ளது. இதற்காக ‘புலிகள் மறுவாழ் வுக்கான நிலையான செயல்முறைகள்’ என்கிற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரி கூறும்போது, “புலிகள் எண்ணிக்கை உயர்ந்தது நல்லது என்றாலும் ஒரே பகுதியில் அதிக எண்ணிக்கையில் புலிகள் இருப்பது நல்லது அல்ல. ஏனெனில் இரை ஆதாரம் மற்றும் வாழிடப் பரப்பு குறைந்த நிலையில் இதுபோன்ற சூழல் புலிகளுக்குள் மோதலை ஏற்படுத்தும். மனிதர் – புலி மோதலை அதிகரிக்கும். ஆட்கொல்லி புலிகள் உருவாகும் சூழல் ஏற்படும். புலிகள் வேட்டைக்கும் சாதகமான சூழல் உருவாகும்.

மேலும் ஒரே சரணாலயத்தில் அதிக எண்ணிக்கையிலான புலிகளை வைத்து பராமரிப்பது அந்த நிர்வாகத்துக்கும் சிரமங்களை ஏற்படுத்தும். அதற்காகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதுதொடர்பான செயல்முறைகள் அறிக்கை அனைத்து தலைமை வனப் பாதுகாவலர்கள் மற்றும் புலிகள் காப்பகங்களின் இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.” என்றார்.

இதுகுறித்து இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி யாளரான டாக்டர் கே.ரமேஷ் ‘தி இந்து’விடம் கூறும்போது, “விலங்கு கள் இயற்கையாகவே வலசை மேற்கொண்டு தங்கள் வாழிடங்களை நிர்ணயித்துக்கொள்ளும். ஆனால் இன்று இந்தியாவில் தொடர் காடுகள் இல்லை. காடுகளின் இடையே மக்களின் வாழ்விடங்கள், நகரங்கள் குறுக்கிடுகின்றன. எனவே, புலிகளின் வலசை தடைபடுகிறது.

தாய் புலிகள் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே குட்டிகளை தன்னுடன் வைத்து பயிற்சி அளித்துவிட்டு, வேறு வனப்பகுதிக்கு விரட்டிவிடும். அப்படி விரட்டப்படும் குட்டி களே உயிர் வாழ்வதற்காக கடுமையான சவால்களை சந்திக்கின்றன. தற்போதைய திட்டத்தின்படி அதுபோன்ற இளம் புலி களை மட்டுமே இடப் பெயர்ச்சி செய்வோம்.

இதற்காக கண்காணிப்பு கேமரா மற்றும் ரேடியோ காலர் மூலம் அனைத்து புலிகளையும் மிக நெருக்கமாக கண் காணித்து இரை ஆதார விவரங்கள், புலிகளுக்கான சவால்கள் உள்ளிட்ட விவரங்களை தரும்படி அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டி ருக்கிறோம். மாநில அரசுகள் அளிக்கும் ஒத்துழைப்பைப் பொறுத்து ஓர் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறும்” என்றார்.

இந்தத் திட்டம் செயல் வடிவம் பெற்றால் உலகில் பெரிய அளவில் விலங்குகள் செயற்கை முறையில் இடப் பெயர்ச்சி செய்யும் திட்டமாக இது அமையும் என்கிறார்கள் வனவியல் வல்லுநர்கள்.

எங்கிருந்து எங்கு இடப் பெயர்ச்சி?

சிவாலிக் மலைத் தொடர் மற்றும் கங்கை சமவெளியில் கார்பெட் புலிகள் காப்பகம், துத்வா தேசிய பூங்கா, கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம், கட்டர்நியாகட் வனவிலங்கு சரணாலயம், பிலிபித் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களிலிருந்து ராஜாஜி தேசிய பூங்காவின் மேற்கு பகுதியிலிருக்கும் தோல்கண்ட், கன்ஸ்ரோ, ஹரித்துவார், மோடீச்சூர், ராம்கர், சில்லிவாலி காடுகள் ஆகிய பகுதிகளுக்கு புலிகள் இடம் மாற்றப்படும்.

மத்திய இந்தியப் பகுதியில் ரான்தம்பூர் புலிகள் காப்பகத்திலிருந்து கைலாதேவி வனவிலங்கு சரணாலயம், குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயம், முகுந்தாரா மலைகள் புலிகள் காப்பகம் ஆகிய இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும். இதே பகுதியில் கன்ஹா புலிகள் காப்பகம், பெஞ்ச் புலிகள் காப்பகம், தடோபா – அந்தேரி புலிகள் காப்பகம், பந்தாவ்கார்க் புலிகள் காப்பகம் ஆகிய பகுதிகளிலிருந்து சஞ்சய் துப்ரி புலிகள் காப்பகம், குரு காஸிதாஸ் தேசிய பூங்கா, அச்சானாக்மர்க் புலிகள் காப்பகம், உடண்டி – சிட்டனாடி புலிகள் காப்பகம், கவ்வால் புலிகள் காப்பகம், இந்திராவதி புலிகள் காப்பகம், பாலமோவ் புலிகள் காப்பகம், நவுராதேஹி வனவிலங்கு சரணாலயம் மற்றும் அதை சுற்றியுள்ள வனங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும்.

ஆந்திராவின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் நாகர்ஜுன்சாகர் – ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்திலிருந்து ஸ்ரீலங்கா மல்லேஸ்வரா வனவிலங்கு காப்பகம், ஸ்ரீ பெனுசிலா நரசிம்மா வனவிலங்கு காப்பகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்கா மற்றும் ஸ்ரீசைலம், சித்தாவட்டம், கர்நூல், பிரகாசம், கடப்பா ஆகிய பகுதிகளின் காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்படும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பந்திப்பூர், நாகர்ஹோலே மற்றும் சாம்ராஜ்நகர் பி.ஆர்.டி புலிகள் காப்பகம் ஆகிய பகுதிகளிலிருந்து பத்ரா, தண்டேலி – அன்ஸி, சாஹாத்திரி புலிகள் காப்பகம் மற்றும் கோவாவின் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்படும்.