பெற்றோரை ஒருமையில் திட்டிய எஸ் ஐ யுடன் கைகலப்பில் இறங்கிய பள்ளி மாணவன்!

Filed under: தமிழகம் |

கோவை, ஜூன் 19

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் இரவு நேர டிபன்கடை நடத்தி வருபவர் வேலுமயில். இவர், கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் தனது மகனுடன் இரவு எட்டு மணிக்கு மேல் தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்து வந்தார். அங்கு வந்த ரத்தினபுரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லமணி கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் கடையை திறக்க கூடாது உடனடியாகவே மூடும்படி கூறினார்.

அப்போது வேலுமயிலின் மனைவி கடந்த மூன்று மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் தள்ளுவண்டியில் இட்லி தோசை விற்பனை செய்து வருவதாக கூறினார். அப்போது போலீசார் உடனடியாக கடையை மூடும் படி மீண்டும் வற்புறுத்தினர். அப்போது எஸ்.ஐ. செல்லமணிக்கும், வேலுமயிலின் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எஸ்.ஐ. செல்லமணி தனது பெற்றோரை ஒருமையில் பேசியதை பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் தனது மொபைலில் படம்பிடித்துள்ளார். இதனைக் கண்ட எஸ்.ஐ. செல்லமணி வேலுமயிலின் அலைபேசியை பறிக்க முயன்றார், இதனையடுத்து காவலர்களின் இருசக்கர வாகனத்தின் சாவியை வேலுமயிலின் மகன் பிடுங்கினார்.

இதை அடுத்து காவலர்கள் அவரை பிடிக்க முயன்றனர், மேலும்  எஸ். ஐ. செல்லமணியுடன் இருந்த காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாக அவரை பள்ளி மாணவன் என்றும் பாராமல் லத்தியால் தாக்கினார்கள். வேலுமயில் மற்றும் அவரது மனைவி தடுத்து தன் மகன் பள்ளி மாணவன் அவனது செயலை மன்னித்து விடுமாறு கெஞ்சினார். சிறுவனின் தாய் சாலையில் அமர்ந்து கொண்டு அருகில் உள்ளவர்களிடம் தனக்கு உதவுமாறு கதறி அழுதனர். இந்த பாசப் போராட்டம் காரணமாக அவ்வழியே செல்பவர்கள் நின்று வேடிக்கை பார்த்தவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.

இதனைத் தொடர்ந்து மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்க தயார் என பெற்றோர்கள் கூறினர். இதனை தொடர்ந்து தனது மகனுடன் போலீஸ் வாகனத்தில் ஏற முயன்ற தாயை தடுத்து நிறுத்திய போலீசார் அந்தப் பள்ளி மாணவனை மட்டும் வண்டியில் ஏற்றிச் சென்றனர். இதனை படமெடுத்த மற்றொரு நபரின் அலைபேசியை பிடுங்கினார் காவல் உதவி ஆய்வாளர் செல்லமணி. அந்த நபர் அலைபேசியை தருமாறு கேட்டபோது அவரை ஒருமையில் திட்டியதுடன் அலைபேசியை தர மறுத்து விட்டு அதை எடுத்துச் சென்றுவிட்டார். காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்ட சிறுவனை இரத்தினபுரி காவல் நிலையம் அழைத்துச் சென்று பின்னர் மாணவர் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியை அழைத்து மாணவரின் நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளனர். மாணவன் சராசரியாக படிக்கக் கூடியவர் எனவும் பெற்றோர் மீது அதிகப் பாசம் கொண்டவர் என்றும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுவனின் எதிர்காலம் கருதி  வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து அவரிடம் மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.

மேலும் பள்ளி மாணவனின் தந்தை வேலுமயில் மீது பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துவதாக IPC 75 சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் விடுவித்தனர். பள்ளி சிறுவன் உதவி ஆய்வாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் கோவையில் வேகமாக பரவி வருகிறது.

கோவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மாநகர பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் வைத்துக்கொள்வதற்கு அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரத்தினபுரி காவல் நிலைய சரகத்தில் 9 க்கு மேற்பட்ட மதுபான கடைகள் பார்கள் உள்ளன. இரவு 8 மணிக்கு மேல் மதுபான கடைகள் இல்லாவிட்டாலும் மதுபான பார்களில் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பார் மகளே பார் என்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இப்படி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை ரத்தினபுரி காவல் நிலையத்திலிருந்து ரோந்து செல்லும் வாகனங்கள் மற்றும் எஸ்.ஐ. செல்லமணி கண்டும் காணாதது போல் செல்கின்றனர்.

அத்துடன் அந்த மதுபான கடைக்கு முன்பு குடிமகன்களுக்கு தேவையான ஸ்னாக்ஸ் ஐட்டங்கள், முட்டை, ஆம்லெட், மீன் வருவல், ஆகியவை தங்குதடையின்றி கிடைக்கிறது. அத்துடன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் தாராளமாக கிடைக்கிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத ரத்தினபுரி காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட அப்பாவியான வேலுமயில் இரவு நேர டிபன் கடை விவகாரத்தில் பொதுமக்கள் கூடும் பப்ளிக் ரோட்டில் எஸ்.ஐ. செல்லமணி நடந்து கொண்ட விதம் பொதுமக்களிடத்தில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சாலையோர டிபன் கடை விவகாரத்தால் ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை உருவாகியுள்ளது என்று சில சமூக ஆர்வலர்கள் நம்மிடத்தில் கூறுகிறார்கள்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் சாலையோர டிபன் கடை வியாபாரிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வியாபாரத்திற்கு உத்திரவாதம் தர வேண்டும் எட்டு மணிக்கு மேல் சட்டவிரோதமாக செயல்படும் மதுபானம் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நம்மிடத்தில் கூறுகிறார்கள்.