மனதின் குரல் : பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்!

Filed under: இந்தியா |

புது டெல்லி,  ஏப்ரல் 26

எனதருமை நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் பொது ஊரடங்குக் காலத்தில் இந்த மனதின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.  இந்த மனதின் குரலின் பொருட்டு வந்த ஆலோசனைகள், தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பார்க்கும் போது, எப்போதும் வருவதை விட பல மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றது. ஏகப்பட்ட விஷயங்களை தனக்குள் தாங்கிக் கொண்டு, உங்களது இந்த மனதின் குரல் என் வரையில் வந்திருக்கின்றது. இவற்றை எத்தனை அதிகம் முடியுமோ அத்தனை அதிகம் படிக்க வேண்டும், கேட்க வேண்டும் என்று நான் முயற்சி செய்தேன். பரபரப்பு நிறைந்த இந்தக் காலகட்டத்தில் கவனம் செலுத்த முடியாத பலவற்றின் மீது நீங்கள் அனுப்பியிருக்கும் விஷயங்கள் கவனத்தைச் செலுத்த வைத்திருக்கின்றன, புதிய பார்வையோடு அணுக வைத்திருக்கின்றன. போருக்கு இடையே நடைபெறும் இந்த மனதின் குரலில், அப்படிப்பட்ட பரிமாணங்களை நாட்டுமக்களோடு பகிர்ந்து கொள்ள மனம் விரும்புகிறது.

     நண்பர்களே, பாரதத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் பற்றிச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இது மக்களால் இயக்கப்படும் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராடி வருகிறார்கள், நீங்கள் எதிர்கொண்டு வருகிறீர்கள், மக்களோடு இணைந்து நிர்வாகமும் போரை நேர்கொண்டு வருகிறது. பாரதம் போன்றதொரு விசாலமான தேசம், வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் தேசம், ஏழ்மைக்கு எதிரான தனது அறுதிப் போரை முடுக்கி விட்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரிலே வெற்றி பெற மக்கள் அனைவரின் பங்களிப்பு மட்டுமே வழி.  மேலும், நாம் செய்த பெரும்பேறாக எதைக் கொள்ள வேண்டும் என்றால், இன்று நாடு முழுவதும், நாட்டின் அனைத்துக் குடிமக்களும், இந்தப் போரிலே போர்வீரர்களாகத் தலைமையேற்றுப் போராடி வருகிறார்கள் என்பது தான். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும், இந்தப் போர் மக்களே தங்களுடையது என்று கருதி நடத்தும் போர் என்பதை உணர்வீர்கள்.  எதிர்காலத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெறும் வேளையிலே, இதுபற்றிய வழிமுறைகள் பற்றிப் பேசப்படும் காலத்திலே, இந்தியா நடத்திய போராட்டம் மக்கள் ஏற்று நடத்திய போராட்டம் என்பதாகவே விவாதிக்கப்படும்.   நாடு முழுவதிலும், ஒவ்வொரு தெரு-குடியிருப்புப் பகுதியிலும், அனைத்து இடங்களிலும், இன்று மக்கள் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக, உதவியாக இருக்கிறார்கள். ஏழைகளுக்கு உணவளிப்பதாகட்டும், ரேஷன் முறையாகட்டும், பொது ஊரடங்கைப் பின்பற்றுதலாகட்டும்,மருத்துவமனைகள் பின்பற்றும் வழிமுறையாகட்டும், மருத்துவக் கருவிகளை நாட்டிலேயே ஏற்படுத்தலாகட்டும் – இன்று நாடு முழுவதும் ஒரு இலக்கு, ஒரு திசை என்பதை நோக்கிப் பயணித்து வருகிறது. கரவொலிகள், தட்டொலிகள், விளக்கு, மெழுகுவர்த்திகள் என அனைத்து வகைகளிலும் மக்களின் உணர்வுகள் உயிர் பெற்றன. செயல்புரிய வேண்டும் என்ற பேராவல் உந்த, மக்கள் மனதில் உறுதி வடிவெடுத்தது, அனைவரும் இவற்றால் உத்வேகம் அடைந்தார்கள். நகரமாகட்டும், கிராமமாகட்டும், நாட்டிலே ஒரு மாபெரும் யாகம் நடைபெறுவது போலவும், இதில் அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்கத் துடிப்போடு இருப்பதாகவுமே எனக்குப் படுகிறது.  நமது விவசாய சகோதர சகோதரிகளைப் பாருங்கள்…. ஒருபுறம் இந்தப் பெருந்தொற்றுக்கு இடையே தங்கள் வயல்களில் இரவுபகலாக உழைத்து வருகிறார்கள்; தேசத்தில் யாரும் பட்டினியோடு உறங்கி விடக்கூடாது என்று மறுபுறம் கரிசனத்தை மனதில் தாங்கி வியர்வை சிந்தி வருகிறார்கள்.  அனைவரும் தங்களது சக்திக்கு உட்பட்டு இந்தப் போரிலே பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். வீட்டு வாடகையைத் தள்ளுபடி செய்கிறார்கள் சிலர், வேறு சிலர் தங்கள் ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகையையோ, விருதுப்பணமாக கிடைத்ததையோ PM CARES க்கு அளிக்கிறார்கள். சிலர் வயலில் விளைந்த அனைத்துக் காய்கறிகளையும் தானமாக அளிக்கிறார்கள் என்றால், இன்னும் பிறர் இலவசமாக உணவு அளித்து வருகிறார்கள்.   சிலர் முகக்கவசங்களைத் தயாரிக்கிறார்கள்.  தனிமைப்படுத்தலில் இருக்கும் நமது சில ஏழை தொழிலாளர் சகோதர சகோதரிகள் அவர்கள் தற்போது வசிக்கும் பள்ளிகளுக்குச் சுண்ணம் அடித்து வருகிறார்கள். 

     நண்பர்களே, மற்றவர்களுக்கு உதவ, உங்களுக்கு உள்ளே, உங்கள் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஊற்றெடுக்கும் உணர்வு இருக்கிறது இல்லையா!!  இது, இது தான் கொரோனாவுக்கு எதிராக பாரதம் தொடுத்திருக்கும் பெரும் போருக்கு பலம் அளித்து வருகிறது, இது தான் இந்தப் போரை உண்மையிலேயே மக்கள் இயக்கும் ஒன்றாக மாற்றி இருக்கிறது.  கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டிலே இது எடுத்துக்காட்டாகவே மாறி இருப்பதோடு, தொடர்ந்து பலம் அடைந்தும் வருகிறது.  அது கோடிக்கணக்கானோர் எரிவாயு மானியத்தைத் துறப்பதாகட்டும், இலட்சக்கணக்கான மூத்த குடிமக்கள் ரயில்பயண மானியத்தை விட்டுக் கொடுப்பதாகட்டும், தூய்மை பாரதம் இயக்கத்துக்குத் தலைமை ஏற்பதாகட்டும், கழிப்பறைகள் கட்டுவதாகட்டும் – இப்படி எண்ணிலடங்கா விஷயங்களைக் கூறலாம்.  இந்த அனைத்து விஷயங்களிலிருந்தும் ஒன்று நன்கு தெரிய வருகிறது – நாமனைவரும், மனதால், ஒரு பலமான இழையால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு தேசத்துக்காக நமது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிக்க இதுதான் நமக்கு உத்வேகம் அளிக்கிறது.   

     என் மனம்நிறை நாட்டுமக்களே, நான் நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் மிகவும் பணிவோடும், மரியாதையோடும், இன்று, 130 கோடி நாட்டுமக்களின் இந்த உணர்வுக்குத் தலைவணங்குகிறேன், இதைப் போற்றுகிறேன்.  இந்த உணர்வுக்கு ஏற்ப, உங்கள் இயல்புக்கு ஏற்ற வகையிலே, உங்கள் நேரத்துக்குத் தக்க முறையிலே நீங்கள் பங்களிப்பு நல்க வேண்டும் என்பதற்காக, ஒரு டிஜிட்டல் தளத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  இந்த தளத்தின் பெயர் covidwarriors.gov.in.   நான் மீண்டும் இதன் பெயரைக் கூறுகிறேன் – covidwarriors.gov.in. அரசாங்கம் இந்தத் தகவின் வாயிலாக அனைத்து சமூக அமைப்புக்களின் தன்னார்வத் தொண்டர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புக்கள் ஆகியோரை ஒருவரோடு ஒருவர் இணைத்திருக்கிறோம்.  மிகக்குறைந்த காலத்தில், இந்தத் தகவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடங்கி நமது ஆஷா பெண்கள், துணை செவிலியர் சகோதரிகள், நமது தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் நண்பர்கள், பல்வேறு துறைகளின் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் இந்தத் தகவினைத் தங்களுடையதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் உள்ளூர் அளவிலே நெருக்கடி நிலை மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் மிகுந்த உதவிகரமாக இருக்கின்றார்கள்.  நீங்களுமே கூட covidwarriors.gov.in தகவோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், நாட்டுக்கு சேவை புரியுங்கள், நீங்களும் Covid Warrior ஆக, கோவிடுக்கு எதிரான போராளியாக ஆக முடியும். 

     நண்பர்களே, ஒவ்வொரு இடர்க்காலமும், ஒவ்வொரு போராட்டமும் ஏதாவது ஒன்றை நமக்குக் கற்பிக்கிறது, ஒரு கற்றலை அளிக்கிறது. சாத்தியக்கூறுகளுக்கான பாதையை அமைத்துக் கொடுப்பதோடு, சில புதிய இலக்குகளுக்கான திசையையும் துலக்கிக் காட்டுகிறது.  இந்தச் சூழ்நிலையில் நாட்டுமக்களான நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் மனவுறுதி வாயிலாக, பாரதத்தில் ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கமும் ஏற்பட்டிருக்கிறது.  நமது வியாபாரங்கள், நமது அலுவலகங்கள், நம்முடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவத்துறை என அனைத்தும் விரைவாக, புதிய தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கி முன்னேறி வருகின்றன. தொழில்நுட்ப நிலையில் என்று வரும் போது, நாட்டிலே புதுமைகள் படைப்போர், கண்டுபிடிப்புக்களில் ஈடுபடுவோர் என அனைவரும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையிலே புதிதுபுதிதாக ஏதோ ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

      நண்பர்களே, நாடு ஓரணியாகப் பணியாற்றி வரும் வேளையிலே, என்னவெல்லாம் நடக்கும் என்பதை நாம் நிதர்சனமாக அனுபவித்து வருகிறோம். மத்திய அரசாகட்டும், மாநில அரசுகளாகட்டும், இவர்களின் அனைத்துத் துறைகளும், அமைப்புக்களும் நிவாரணப் பணிகளில் இணைந்து, முழுமூச்சுடன் வேலை செய்து வருகிறார்கள்.  நாட்டுமக்களுக்கு பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நமது விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரிவோர், ரயில்வே பணியாளர்கள் ஆகியோர், இரவுபகலாக அயராது உழைத்து வருகிறார்கள்.  நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் மருந்துகள் கொண்டு சேர்க்கப்பட Lifeline Udan – உயிர்காக்கும் உடான் என்ற பெயரில், சிறப்பான ஒரு இயக்கம் நடைபெற்று வருகிறது என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இதோடு தொடர்புடைய நம்முடைய நண்பர்கள், மிகக்குறைவான நேரத்தில், நாட்டுக்குள்ளே 3 இலட்சம் கிலோமீட்டர்கள் விமானப் பயணம் மேற்கொண்டு, 500 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை, நாட்டின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். இதைப் போலவே ரயில்வேயில் பணிபுரியும் நமது நண்பர்களும், இந்தப் பொது ஊரடங்கு நிலவும் காலகட்டத்திலும் கூட, நாட்டுமக்களுக்கு எந்தவொரு அத்தியாவசியமான பொருளும் கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள்.  இந்தப் பணிக்காகவே இந்திய ரயில்வே சுமார் 60க்கும் மேற்பட்ட ரயில் வழித்தடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்கி வருகிறது.  இதைப் போலவே மருந்துகளின் தேவையை நிறைவு செய்வதில், நமது தபால்துறை ஊழியர்களின் பங்களிப்பும் மகத்தானது. நமது இந்த நண்பர்கள் அனைவருமே, உண்மையிலேயே, கொரோனா போராளிகள் தாம். 

     நண்பர்களே, பிரதம மந்திரி ஏழைகள் நலத் தொகுப்புக்கு உட்பட்டு, ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. முதியோர் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.  ஏழைகளுக்கு 3 மாதக்கால இலவச எரிவாயு சிலிண்டர், ரேஷன் பொருட்கள் வழங்கல் ஆகிய வசதிகள் அளிக்கப்படுகிறது. இந்த அனைத்துப் பணிகளிலும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வங்கிப் பணியாளர்கள் என அனைவரும் ஓரணியாகத் திரண்டு, இரவு பகல் பாராமல் பங்களித்து வருகிறார்கள். மேலும், இந்தப் பெருந்தொற்றோடு நாம் நடத்திவரும் போராட்டத்தில், ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளித்து வரும் நமது நாட்டின் மாநில அரசுகளையும் நான் முழுமனதோடு பாராட்டுகிறேன். உள்ளாட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் ஆகியன பொறுப்புணர்வோடு ஆற்றிவரும் கடமைகள், அவர்களின் உழைப்பு ஆகியன மிகவும் பாராட்டுக்குரியவை.   

     என் கனிவான நாட்டுமக்களே, நாடு முழுவதிலும் சுகாதார சேவைகளை ஆற்றி வருபவர்கள் தொடர்பாக அறிவித்திருக்கும் அவசரச்சட்டம் அவர்களுக்கு மிகவும் மன நிறைவை அளித்திருக்கிறது, அவர்கள் இதை வரவேற்கிறார்கள்.  இந்த அவசரச்சட்டப்படி, கொரோனா வீரர்களுக்கு எதிராகப் புரியப்படும் வன்முறை, கொடுமை அல்லது ஏதாவது ஒருவகையில் அவர்களைத் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக, மிகவும் கடுமையான தண்டனை அளிக்கப்படக்கூடிய ஷரத்துக்கள் இருக்கின்றன.  நமது மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், சமூக சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்கள், இந்த நாட்டைக் கொரோனாவிடமிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இரவு பகலாக போராடி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானதாக ஆகியிருக்கிறது.

     எனதருமை நாட்டுமக்களே, இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போரிலே நாம் பங்கெடுக்கும் இந்த காலகட்டம், நமது வாழ்க்கை, நமது சமூகம், நம்மைச் சுற்றி நடைபெற்றுவரும் சம்பவங்கள் ஆகியவற்றை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் சந்தர்ப்பத்தை நமக்கு அளித்திருக்கிறது.   சமூகத்தின் பார்வையுமே கூட பரந்தவகையிலே மாற்றம் கண்டிருக்கிறது. நமது வாழ்க்கையோடு தொடர்புடைய ஒவ்வொரு மனிதனின் முக்கியத்துவத்தையும் நாம் இன்று உணர்கிறோம். நமது வீடுகளில் பணிபுரிபவர்கள் ஆகட்டும், நமது தேவைகளை நிறைவு செய்ய பணியாற்றும் எளிய தொழிலாளியாகட்டும், அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைகளில் பணிபுரிவோர் ஆகட்டும், இவர்கள் அனைவரின் மிகப்பெரிய பங்களிப்பை நாம் நேரடியாக அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. இதைப் போலவே, அவசியமான சேவைகளைக் கொண்டு சேர்ப்பவர்கள், சந்தைகளில் பணிபுரியும் நமது தொழிலாள சகோதர சகோதரிகள், நமது அண்டைப்புறங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் போன்றவர்கள் இல்லாது போனால் நமது அன்றாட வாழ்வு எத்தனை கடினமானதாக இருக்கும் என்பதை நாம் இன்று அனுபவித்து வருகிறோம், இல்லையா?

     சமூக ஊரடங்கு இருக்கும் இந்த காலத்திலே மக்கள் தங்களுடைய இந்த நண்பர்களை நினைவுபடுத்திக் கொள்கிறார்கள், அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள், அவர்களைப் பற்றி மிகுந்த கண்ணியத்தோடு சமூக ஊடகங்களில் எழுதியும் வருகிறார்கள் என்று நாம் பார்க்கிறோம். துப்புரவுப் பணியாளர்கள் மீது நாட்டின் பல இடங்களில் மக்கள் பூச்சொரியும் படங்களை நாம் பார்க்க நேர்கிறது.  முன்பெல்லாம் அவர்களின் சேவையை பெரும்பாலும் யாரும் ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டார்கள்.  மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அல்லது வேறு சேவைகளில் ஈடுபடுபவர்கள், காவல்துறை நண்பர்கள் போன்றோரைப் பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டம் கணிசமான அளவுக்கு மாறியிருக்கிறது. நமது காவல்துறையினர் இன்று ஏழைகள், தேவையால் வாடுபவர்கள் ஆகியோருக்கு உணவும் மருந்தும் கொண்டு சேர்த்து வருகிறார்கள். எந்த வகையில் இந்தச் செயல்பாடுகள் காவல்துறையினரின் மனிதநேயத்தையும், மனித உணர்வையும் வெளிப்படுத்துகிறதோ, அதே அளவு நமது மனதில் நெகிழ்வையும், நிறைவையும் ஏற்படுத்துகிறது. பொதுமக்கள் காவல்துறையினரோடு உணர்வுரீதியிலான ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இது ஒரு அருமையான சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. நமது காவல்துறையினரும் பொதுமக்களுக்கு சேவைபுரிய கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாகவே இதைக் கருதுகிறார்கள்.  இந்தச் சம்பவங்கள் அனைத்தின் வாயிலாக, இனிவரும் காலத்தில் உண்மையிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படலாம், இந்த ஆக்கப்பூர்வமான உணர்வை என்றுமே நாம் எதிர்மறை உணர்வாக ஆகவிட மாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

     நண்பர்களே, இயற்கை, பிறழ்வு, கலச்சாரம் என்ற இந்த மூன்று சொற்களையும் ஒருசேரப் பார்த்தால், இவற்றின் பின்னணியில் இருக்கும் உணர்வு, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள ஒரு புதிய கதவைத் திறக்கும். மனித இயல்பு பற்றி நாம் சிந்திக்கும் போது, ‘இது என்னுடையது’, ’இதை நான் பயன்படுத்துகிறேன்’ – இந்த உணர்வு மிகவும் இயல்பானதாகக் கருதப்படுகிறது. யாருக்கும் இதிலே எந்தவிதமானதொரு ஆட்சேபமும் இருப்பதில்லை. ஆனால் ‘எது என்னுடையது இல்லையோ’, ‘எதன் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லையோ’, அதை நான் மற்றவர்களிடமிருந்து பறிக்கிறேன், பறித்துப் பயன்படுத்துகிறேன் எனும் போது, இதைப் ‘பிறழ்வு’ என்று அழைக்கிறோம். இவை இரண்டையும் தாண்டி, இயற்கை, பிறழ்வு ஆகியவற்றிலிருந்து மேலெழும்பி, பக்குவப்பட்ட மனக்கண் கொண்டு பார்க்கும் போதும், செயல்படும் போதும், அங்கே ”கலாச்சாரம்” புலப்படும். யாராவது தங்களது உரிமைப் பொருட்களை, தங்கள் உழைப்பின் ஊதியத்தை, தங்களுக்கு அத்தியாவசியமாக இருப்பவனவற்றை – அது கூடுதலாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றியோ, தங்களைப் பற்றியோ கவலை கொள்ளாமல், பிறரின் தேவைகருதி, தங்களுக்கு உரித்தானதைப் பிறருக்கு அளித்து அவர்களின் தேவையை நிறைவு செய்வது தான் ‘கலாச்சாரம்’. நண்பர்களே, சோதித்துப் பார்க்கும் காலம் இது, இப்போது தான் இந்த குணங்கள் உரைத்துப் பார்க்கப்படும்.

     கடந்த நாட்களில் நீங்களே கவனித்திருக்கலாம், அதாவது இந்தியா தனது கலாச்சாரத்தை ஒட்டி, நமது எண்ணங்களுக்கு ஏற்ப, நமது கலாச்சாரத்தைப் பின்பற்றி சில முடிவுகளை மேற்கொண்டோம். சங்கடம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், வளர்ந்த நாடுகள் உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் மருந்துகளின் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு மருந்துகளை அளிக்க மறுத்தால் யாரும் நம்மைக் குறைகூறப் போவதில்லை.  இந்தியாவுக்கு அதன் குடிமக்கள் தாம் முதன்மை என்பதை அனைத்து நாடுகளும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நண்பர்களே, இந்தியா, இயற்கை, பிறழ்வு ஆகியவற்றைத் தாண்டி தீர்மானம் மேற்கொண்டிருக்கிறது.  இந்தியாவானது தனது கலாச்சாரத்துக்கு ஏற்றவகையில் முடிவெடுத்திருக்கிறது. நாம் இந்தியாவின் தேவைகளின் பொருட்டு என்ன செய்ய வேண்டுமோ, அது தொடர்பான முயற்சிகளையும் அதிகப்படுத்தியிருப்பதோடு, உலக மனித சமுதாயத்தின் பாதுகாப்புக்கோரும் குரலுக்கு செவிசாய்த்து, அவர்களின் தேவையையும் நிறைவேற்றி வருகிறோம். உலகின் தேவையானவர்கள் அனைவருக்கும்   மருந்துகளைக் கொண்டு சேர்க்கும் சவாலை நாம் மேற்கொண்டிருக்கிறோம், மனிதநேயத்துடன் இந்தப் பணியை நாம் நிறைவேற்றி வருகிறோம். பல நாடுகளின் தலைவர்களோடு நான் பேசும் வேளையில் அவர்கள் அனைவருமே இந்திய மக்களுக்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.  ‘இந்தியாவுக்கு நன்றி, இந்திய மக்களுக்கு நன்றி’ என்று அவ்ர்கள் கூறும்போது, நாட்டின் பெருமை அதிகரிக்கிறது. இதைப் போலவே, இப்போது உலகம் முழுவதிலும் இந்தியாவின் ஆயுர்வேதம் மற்றும் யோகக்கலையின் மகத்துவம் பற்றி மிகவும் சிறப்பான வகையிலே பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். சமூக ஊடகங்களைப் பாருங்கள், அனைத்து வகையிலும் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க, எப்படியெல்லாம் இந்தியாவின் ஆயுர்வேதமும், யோகக்கலையும் அளிக்கும் ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.  கொரோனா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம், நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க அளித்திருக்கும் நெறிமுறைகளை நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்றி வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். வெந்நீர், கஷாயம் ஆகியவற்றைக் குடித்தல், இன்னும் பிற நெறிமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவற்றை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இவற்றை நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தீர்கள் என்றால் உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.

       நண்பர்களே, கோவிட் – 19 காரணமாக நாம் பணியாற்றும் வழிமுறைகள், நமது வாழ்க்கைமுறை, நமது பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் இயல்பான வகையிலே பல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நாம் கண்டு வருகிறோம். பல விஷயங்களில், நமது புரிதலையும், விழிப்புணர்வையும் இந்தச் சங்கடமான வேளையானது தட்டி எழுப்பி இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். நம் அனைவரின் அருகிலும் காணப்படும் ஒரு தாக்கம் எனும் போது, முகக்கவசம் அணிதல், நமது முகங்களை மூடி வைத்தல் ஆகியனவற்றைச் சொல்லலாம்.  கொரோனா காரணமாக, மாறிவரும் சூழ்நிலையில், முகக்கவசமும் கூட, நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டது.   முகக்கவசம் அணிவதாலேயே ஒருவருக்கு நோய் இருக்கிறது என்பது பொருளல்ல. இப்போது நான் முகக்கவசம் பற்றிப் பேசும் போது, எனக்கு பழைய ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.  இது உங்களுக்குமேகூட நினைவுக்கு வரலாம்.  ஒரு காலத்தில், நம்முடைய நாட்டிலே, யாராவது ஒருவர் பழம் வாங்குவதைப் பார்த்தோம் என்றால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவரிடத்தில் கண்டிப்பாக ஒரு வினாவை எழுப்புவார்கள் – என்ன உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையா என்பது தான் அது.   அதாவது பழம் வாங்குதல் என்று சொன்னால், நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்பார்கள் என்று கொள்ளப்படும். இப்படிப்பட்ட ஒரு கருத்து நிலவிய காலம் உண்டு.   காலம் மாறியது, காட்சியும் மாறியது.  இதைப் போலவே தான் இன்று இந்த முகக்கவசம் தொடர்பாகவும் கருத்து மாற இருக்கிறது.  பாருங்களேன், முகக்கவசம் என்பது இப்போது பண்பட்ட சமூகத்தின் அடையாளமாக மாறி விடும். நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக முகக்கவசத்தை அணிய வேண்டும்.  என்னுடைய எளிமையான ஆலோசனை என்ன தெரியுமா?  தோளில் கிடக்கும் துண்டைக் கொண்டு முகத்தை மூடுங்கள், சரியா?

     நண்பர்களே, நம்முடைய  சமூகத்தில், மேலும் ஒரு பெரிய விழிப்புணர்வு என்ன ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், பொதுவிடங்களில் துப்புவதால் என்ன தீங்கு ஏற்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். அங்கே இங்கே என கண்டவிடங்களிலும் துப்புவது, தவறான பழக்கத்தின் அங்கமாக ஆகியிருந்தது.  இது தூய்மைக்கும், ஆரோக்கியத்துக்கும் பெரிய சவாலாக வடிவெடுத்து இருந்தது.  ஒரு வகையில் பார்த்தோம் என்றால், இந்தப் பிரச்சனை பற்றி நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் சமூகம் சிக்கித் தவித்தது.  இப்போது இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் கனிந்து விட்டது. Better late than never, என்று கூறுவார்களில்லையா?  கால தாமதமானாலும்கூட, இனிமேல் பொதுவிடங்களில் துப்புவதை விட்டொழித்தே ஆக வேண்டும். இவை அடிப்படை சுகாதார விஷயங்களை மேம்படுத்தும் அதே வேளையில், கொரோனா பரவலைத் தடுப்பதில் பெரும் உதவிகரமாக இருக்கும்.

     எனதருமை நாட்டுமக்களே, நான் உங்களோடு இன்று உரையாற்றிக் கொண்டிருக்கும் இந்த நாள், அக்ஷய திரிதியை புனிதமான நன்னாள்.  நண்பர்களே, ‘க்ஷய’ என்ற சொல்லின் பொருள், அழியும் தன்மை உடையது, ஆனால், அழிவே இல்லாமல் வளர்வது என்றால் அது “அக்ஷய்’’. நம்முடைய இல்லங்களில் நாமனைவரும் இந்தப் புனித நன்னாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவோம் என்றாலும் இந்த ஆண்டு நமக்கு இது விசேஷமான மகத்துவத்தைத் தாங்கி வருகிறது. இன்றைய இந்தக் கடினமான வேளையில், இந்த நாளானது, நமது ஆன்மா, நமது உணர்வு ஆகியன குறைவே இல்லாமல் வளரும் தன்மை உடையன என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த நன்னாள், நமது பாதையில் எத்தனை தான் இடர்கள் எதிர்ப்பட்டாலும், எத்தனை சங்கடங்கள் எதிர்வந்தாலும், எந்தனை நோய்கள் பீடித்தாலும், இவை அனைத்துக்கு எதிராகப் போரிடுவது என்ற மனித உணர்வுகள் குறைவில்லாமல் வளர்வன என்பதைக் குறிக்கிறது.  இந்த நன்னாளன்று தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சூரிய தேவன் ஆகியோருடைய நல்லருளால் பாண்டவர்களுக்கு அள்ள அள்ளக்குறையாத அக்ஷ்ய பாத்திரம் கிடைத்தது என்று கருதப்படுகிறது. நம்மனைவருக்கும் அன்னமளிக்கும் வள்ளல்களாம் விவசாயிகள், அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாட்டுக்காக, நமக்காக இதே உணர்வோடு தான் உழைத்து வருகிறார்கள். இவர்களுடைய மகத்தான உழைப்பின் காரணமாகவே, இன்று நம்மனைவருக்கும், ஏழைகளுக்கும், நாட்டில் உணவுப்பொருள் சேமிப்பு நிறைவாகவும் வளமாகவும் இருக்கிறது.  இந்த அக்ஷ்ய திரிதியை நன்னாளன்று, நமது வாழ்க்கையில் மகத்துவம் நிறைந்த பங்களிப்பு நல்கிவரும் நமது சுற்றுச்சூழல், வனங்கள், நதிகள், ஒட்டுமொத்த சூழல் அமைப்புப் பாதுகாப்பு பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.  நாம் குறைவற்றவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், நமது பூமி குறைவற்றதாக இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

     அக்ஷ்ய திரிதியை என்ற இந்த நன்னாள், அளித்தலின் சக்தி அதாவது power of giving என்பதை செயல்படுத்தவும் ஒரு சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. இருதயப்பூர்வமாக நாம் எந்த ஒரு பொருளைக் கொடுத்தாலும், மகத்துவம் அளித்தல் உணர்வுக்குத் தானே ஒழிய, கொடுக்கப்படும் பொருளுக்கு அல்ல.  நாம் என்ன கொடுக்கிறோம், எத்தனை கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, கொடுக்க வேண்டும் என்ற உணர்வே பிரதானம்.  இந்தச் சங்கடம் நிறைந்த காலகட்டத்தில் நம்முடைய மிகச்சிறிய முயற்சிகூட, நமக்கு அருகிலே இருக்கும் பலருக்கு மிகப்பெரிய பலமாக ஆகும் வல்லமை உடையது.  நண்பர்களே, ஜைன பாரம்பரியத்திலும்கூட, இது மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது; இந்த நாள் தான் முதல் தீர்த்தங்கர் பகவான் ரிஷபதேவரின் வாழ்க்கையில் மகத்துவமான நன்னாள். இதை ஜைனர்களும் புனித நாளாகக் கொண்டாடுகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த நாளில் தான் மக்கள் எந்த ஒரு மங்கலமான காரியத்தையும் ஆரம்பித்துச் செய்வதை விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   ஏனென்றால், இன்று புதிய செயல் ஒன்றைத் துவக்கும் நாள் என்பதால், நாமனைவருமாக இணைந்து, நம்முடைய முயற்சிகள் காரணமாக நமது பூமியை வளமானதாக, குறைவேதும் இல்லாததாக ஆக்குவோம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்வோமா?  நண்பர்களே, இன்று பகவான் பஸவேஸ்வரின் பிறந்தநாளும் கூட.  பகவான் பஸவேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் அளித்திருக்கும் செய்தியினைப் பற்றியும் மீண்டும் மீண்டும் சிந்திக்கவும், கற்கவும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது என்பதை நான் பெரும்பேறாகவே கருதுகிறேன்.  நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் பகவான் பஸவேஸ்வரின் அனைத்து சீடர்களுக்கும் அவரது பிறந்தநாளை ஒட்டி பலப்பல நல்வாழ்த்துக்கள். 

     நண்பர்களே, ரமலான் புனித மாதம் தொடங்கியிருக்கிறது.  கடந்த முறை ரமலான் கொண்டாடப்பட்ட போது, இந்த முறை ரமலான் வேளையில் இத்தனை பெரிய சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.  ஆனால், இப்போது உலகம் முழுவதிலும் இந்தப் பெரும் சங்கடம் கொரோனா வடிவில் உருவெடுத்திருக்கும் வேளையில், இந்த ரமலானை, சுயகட்டுப்பாடு, சகோதரத்துவம், புரிந்துணர்வு, சேவை உணர்வு ஆகியவற்றின் அடையாளங்களாக மாற்றும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது.   இந்த முறை நாம் முன்னர் செய்ததை விட அதிகமாக பிரார்த்தனைகளைச் செய்வோம்.  இதன் காரணமாக, ஈத் வருவதற்கு முன்பாக கொரோனாவிடமிருந்து நாம்  விடுபடுவோம், முன்பைப் போலவே உற்சாகத்தோடும், சந்தோஷத்தோடும் ஈத் நன்னாளைக் கொண்டாடுவோம்.  ரமலானின் இந்த நாட்களின் போது உள்ளூர் நிர்வாகத்தினரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, கரோனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இந்தப் போரை நாம் மேலும் பலப்படுத்துவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  தெருக்களில், சந்தைகளில், குடியிருப்புப் பகுதிகளில், தனி நபர் ரீதியான விலகியிருத்தலின் விதிகளைப் பின்பற்றி நடப்பது இப்போது மிகவும் அவசியமானது.   ஒருவர் மற்றவருக்கு இடையே குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பன போன்ற விஷயங்களில் தங்களது சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உதவிகரமாக இருக்கும் அனைத்துச் சமுதாயத் தலைவர்களுக்கும் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உண்மையிலேயே கொரோனாவானது இந்தமுறை பாரதம் உட்பட, உலகெங்கிலும், பண்டிகைகளைக் கொண்டாடும் பாங்கினையே மாற்றி இருக்கிறது, அவற்றின் வடிவங்களை மாற்றி விட்டது.  கடந்த நாட்களில் நம் நாட்டிலே பிஹூ, பைசாகீ, புத்தாண்டு, விஷூ, ஒடியா புத்தாண்டு போன்ற பல பண்டிகைகள் வந்தன. எப்படி தங்கள் வீட்டில் இருந்தபடியே, மிக எளிமையான வகையிலே, சமூகத்தின்பால் நல்லெண்ணத்தோடு பண்டிகைகளை மக்கள் கொண்டாடினார்கள் என்பதை நாம் பார்த்தோம். பொதுவாக, அவர்கள் இந்தப் பண்டிகைகளைத் தங்கள் நண்பர்களோடும், குடும்பத்தாரோடும் பெரும் உவகையோடும் உற்சாகத்தோடும் கொண்டாடுவார்கள். வீட்டிலிருந்து வெளியே சென்று தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இந்த முறையோ, அனைவருமே கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தார்கள். முழுமையான ஊரடங்கின் விதிமுறைகளின்படி நடந்து கொண்டார்கள். இந்த முறை நம்முடைய கிறிஸ்தவ நண்பர்களும், ஈஸ்டர் நாளை வீட்டில் இருந்தபடியே கடைப்பிடித்தார்கள்.  நம்முடைய சமூகம் மற்றும் நாட்டின் பால், பொறுப்புணர்வோடு நடந்து கொள்வது இன்றைய மிக முக்கியமான தேவை. இதன் வாயிலாகத் தான் நாம் கொரோனாவின் பரவலாக்கத்தைத் தடுப்பதில் வெற்றி பெற முடியும், கொரோனா போன்ற உலகம் தழுவிய பெருந்தொற்றைத் தோற்கடிக்க இயலும். 

     எனதருமை நாட்டுமக்களே, இந்த உலகளாவிய பெருந்தொற்றுக்கு இடையே, உங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற முறையில், சில விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது, ஆலோசனைகள் அளிப்பது ஆகியன என்னுடைய கடமையாகின்றது. நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்….. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாம் அதீத நம்பிக்கையில் சிக்கிக் கொள்ள வேண்டாம், நமது நகரத்தில், நமது கிராமத்தில், நமது தெருவில், நமது அலுவலகத்தில், இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை, இனியும் அது நம்மை அண்டாது என்றெல்லாம் தயவுசெய்து எண்ணங்களை உங்கள் மனதிலே வளர்த்துக் கொள்ள வேண்டாம்.   உலகம் சந்தித்திருக்கும் அனுபவங்கள் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகளை அளிக்கின்றன. கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும், அழிவுப்பாதை நிச்சயம் என்ற கருத்தை மனதில் தாங்கித் தான் நமது முன்னோர்கள் இந்த அனைத்து விஷயங்களிலும் மிகச் சிறப்பான வகையிலே வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள். 

 ‘अग्नि: शेषम् ऋण: शेषम् ,

व्याधि: शेषम् तथैवच |

पुनः पुनः प्रवर्धेत,

तस्मात् शेषम् न कारयेत ||

அக்நி: சேஷம் ருண: சேஷம்,

வ்யாதி: சேஷம் ததைவச.

புன:புன: ப்ரவர்தேத்,

தஸ்மாத் சேஷம் ந காரயேத்.

அதாவது, சிறிய அளவில் தானே இருக்கிறது என்று, நெருப்பு, கடன், நோய் ஆகியவற்றை இன்று நாம் லேசாக எடுத்துக் கொண்டோம் என்றால், இவையே வாய்ப்பு கிடைக்கும் போது அதிகமாகி ஆபத்தில் கொண்டு விடும்.  ஆகையால், இவற்றை முழுமையாக கருவறுப்பது மிக அவசியம்.  அதிக உற்சாகம் உந்த, உள்ளூர் மட்டத்தில், எந்த விதமான கவனக்குறைவும் இருக்கவே கூடாது.  இதை நாம் எப்போதும், என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டும்.   நான் மேலும் ஒருமுறை கூறுகிறேன்.  இரண்டு மீட்டர் இடைவெளி காப்போம், நாம் உடல்நலத்தோடு இருப்போம். உங்கள் அனைவருக்கும் சிறப்பான உடல்நலம் வாய்க்கட்டும் என்ற பிரார்த்தனைகளோடு, என் உரையை நான் நிறைவு செய்கிறேன்.  அடுத்த மனதின் குரலில் நாம் சந்திக்கும் வேளையில், இந்த உலகளாவிய பெருந்தொற்றிலிருந்து விடுதலை அடைந்தோம் என்ற செய்தி உலகெங்கிலுமிருந்து கிடைக்கப்பெறட்டும்!! மனித சமுதாயம் இந்தச் சங்கடங்களிலிருந்து வெளியே வரட்டும்!! இந்தப் பிரார்த்தனைகளுடன் உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.