அண்ணன் நடிகர் திரு. ஜோசப் விஜய் அவர்களே ( leo) லியோ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறீர்கள். உங்களின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று ‘நான் ரெடி’ என்ற வரிகளை கொண்ட பாடலை லியோ பட குழுவினர் வெளியிடப் போவதாக அறிவிப்பினை சமூக வலைதளம் மூலமாக அறிவித்திருப்பதை அறிந்தேன்.
அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பு போட்டோவில் அண்ணன் நடிகர் திரு. ஜோசப் விஜய் அவர்களே நீங்கள் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி இடம் பெற்று இருப்பது தவறான முன் உதாரணமாகும். இது கண்டிக்கத்தக்கது. உங்களை பல லட்சங்கள் கொண்ட ரசிகர் பட்டாளங்கள் பின் தொடர்கிறது. உங்களை பின்பற்றுபவர்கள் பொதுவாக 1990,2000 ஆண்டுகளை சார்ந்த இளைஞர்களாக, மாணவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது தான் இவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களாகவும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களாகவும். குடும்ப சுமை காரணமாக தனது வாழ்க்கையை நடத்த வேலைக்கு செல்பவராகவும் உள்ளனர்.
தெரிந்தோ தெரியாமலோ அல்லது அறியாமலோ நமது இளைஞர்கள் சினிமா கொட்டகைகளில் தங்களின் தலைவர்களை தேடுகின்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதற்கு தடை இல்லை. அண்ணன் நடிகர் திரு. ஜோசப் விஜய் அவர்களே உங்களை ப பின் தொடரும் நம் இளைஞர்கள் நம் தலைவன் விதவிதமாக சிகரெட் பிடிக்கிறார் நாமும் அவ்வாறு செய்யலாம் என்று நினைக்க நிறைய வாய்ப்பு உண்டு. காரணம் சினிமாவின் தாக்கம் மக்கள் மத்தியில் பெரிதாக உள்ளது. யாரோ ஒரு திரைப்படத்தின் நடிகர் சிகரெட் புகைப்பதால் நாட்டில் ஒட்டுமொத்த சமுதாயம் சீர்கேடு ஆகும் என்ற சொந்த வாதங்களை சிலர் பேசலாம் ஆனால் அண்ணன் திரு.ஜோசப் விஜய் அவர்களே நீங்கள் யாரோ ஒரு முகம் தெரியாத நடிகர் அல்ல நாளை தமிழகத்தை ஆள வேண்டும் என்று முனைப்பில் காய் நகர்த்தி வரும் முன்னணி நடிகர். உங்கள் துறையில் நீங்கள் தான் டாப்.
உங்கள் துறையிலிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக முன்பு ஆனவர் தனது படங்களில் சிகரெட் புகைப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் சமூக ஒழுக்கத்தோடு வாழ்ந்தார். அப்படியும் அப்பொழுது நடிகர்கள் இருந்தார்கள். இன்று அண்ணன் நடிகர் திரு.ஜோசப் விஜய் அவர்களே உங்களை பார்த்து சில ரசிகர்கள் பாதிக்கப்பட்டாலும் இது உங்களுக்கு ஏற்பட்ட அவமானம். இதனால் அந்த ஒரு ரசிகர் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை அவர் ஒரு தாய்க்கு மகனாக இருக்கலாம் ஒரு பெண்ணிற்கு கணவனாக இருக்கலாம் ஒரு குடும்பத்தை தாங்கும் மூத்த அண்ணனாகவும் இருக்கலாம் இதனால் ஒட்டுமொத்த குடும்பம் பாதிக்கப்படும்.
ஒரு ரசிகர் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து சிகரெட் புகைப்பதாக வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு 100 செலவு ஆகிவிடும். இதனால் அந்த ரசிகனின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். தன் தலைவன் திரைப்படம் வந்தால் பாலாபிஷேகம் செய்வது, கட்அவுட் வைப்பது, முதல் காட்சி 2000 ரூபாயாக இருந்தாலும் கடன் வாங்கி பார்ப்பது, தங்கள் பிள்ளைகளுக்கு உங்களின் பெயரை வைப்பது, உங்களின் பிறந்தநாளில் மக்களுக்கு சேவை செய்வது என்று உங்களுக்கு உயிரை கொடுக்க நினைக்கும் அந்த ரசிகனுக்கு நீங்கள் நல்ல கருத்துக்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் அவர்களுக்கு முன் உதாரணமாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும்.
இந்த ஆண்டு பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 22 உங்களின் பிறந்த நாளை முன்னிட்டு உதவிகளை வழங்க ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு நீங்கள் நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும். நீங்கள் தற்போது நடித்து வரும் லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே புகைப்பிடிப்பது போன்ற காட்சி இருந்தாலும் அந்த காட்சியை நீக்க வேண்டும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சமூகத்தின் மீது அக்கறை இருந்தால் நீங்கள் உங்களை திருத்திக் கொள்ளுங்கள், இல்லையேல் திருத்தப்படுவீர்கள்.
அன்புடன் சகோதரி.
குரு.விருதாம்பிகை
காடுவெட்டி ஜெ.குரு மகள்.
(மறைந்த வன்னியர் சங்க தலைவர் )