முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் காலமானார். அவருக்கு வயது 84.
ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட மயங்கி விழுந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரை அனுமதிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேகாலயா ஆளுநர் வி.சண்முக நாதன், தலைமைச் செயலர் வாஜிரி, ஆகியோர் கலாம் அனுமதிக்கப்பட்ட பெதானி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம்.
ராமேஸ்வரத்தில் அக்டோபர் 15, 1931-ம் ஆண்டு பிறந்தார் அப்துல் கலாம்.
1998-ம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்கு வகித்தவர் அப்துல் கலாம். இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் அழைக்கப்படுபவர் அப்துல் கலாம்.
பத்ம பூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகளை வென்றுள்ளார் அப்துல் கலாம்.