மூன்றாவது அணிக்கு தாவுகிறதா மதிமுக…? வைகோ எடுத்த அதிரடி முடிவு
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, விசிக, சிபிஐ ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை திமுக நிறைவு செய்துள்ளது. இன்னும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடியவில்லை. இந்தக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மதிமுக 12 தொகுதிகளை எதிர்பார்க்க, திமுக 7 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகளை ஏற்க இயலவில்லை என்று மதிமுக அறிவித்துவிட்டது. இந்நிலையில் மதிமுக பேச்சுவார்த்தை குழுவுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
திமுக வுடன் நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையில் மதிமுக ஈடுபட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளை திமுக மரியாதையோடுதான் நடத்துகிறது. திமுக தொகுதி பங்கீடு குறித்து கமல் சொன்ன கருத்து தவறானது. விசிகவை திமுக மரியாதையாகதான் நடத்தியது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு மதிமுகவை திமுக இன்னும் அழைக்கவில்லை. மதிமுக மூன்றாவது அணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை” என்று வைகோ தெரிவித்தார்.