லாட்டரியால் தொடரும் வேதனை!

Filed under: தமிழகம் |

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லாட்டரியை ஒழித்து 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அதன் வேதனை தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதுபற்றி கூறும் போது, “ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நூல் வணிகர் கள்ள லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி வேதனையளிக்கிறது. இதுகுறித்து காணொலி வாக்குமூலமும் வெளியிட்டுள்ளார்!

தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பிறகும் லாட்டரி விற்பனை தொடர்கிறது. ஒருவரே ரூ.62 லட்சத்தை இழந்திருக்கிறார். தமிழ்நாட்டில் கள்ள லாட்டரி விற்பனை எந்த அளவுக்கு புரையோடியிருக்கிறது என்பதை உணர முடியும்!
ஏற்கனவே ஒருபுறம் ஆன்லைன் சூதாட்டம் உயிர்களை பலி வாங்கும் நிலையில், கள்ள லாட்டரியும் மனித வேட்டையை தொடங்கினால் மக்கள் தாங்க மாட்டார்கள். அதனால், தமிழகத்தில் கள்ள லாட்டரியை அடியோடு ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.